மட்டக்களப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்விச் செயலமர்வு…

(படுவான் பாலகன்) இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மட்டக்களப்பு ஒரு புராதன பாரம்பரியம் வாய்ந்த தமிழ் மக்களை அதிகம் கொண்ட வரலாற்று முக்கியம் பெற்ற வளமார்ந்த இடமாகும். “ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்” என்றாள் ஒளவை இந்த அழகுக்கு அழகு சேர்கும் வாவிகள் நிறைந்த, கடற்கரைகள், வயற்புலங்கள், காடுகள் மலைகள் என அனைத்து நிலவமைப்பையும் கொண்ட வளம் நிறை நாடு எமது மீன்பாடும் தேநாடு ஆகும் பெருமைதான்.

இருப்பினும், உங்களுக்கு தெரியுமா மட்டக்களப்பை இன்னும் எவற்றிலெல்லாம் முதல் இடத்தில் வைத்துள்ளார்கள் என?
• அதிகமாக நாளொன்றில் ஒரு டொலருக்கு குறைந்த வருவாயை ஈட்டுகின்ற அதிக வறிய குடும்பங்களைக் கொண்ட மாவட்டம்.
• அதிக சமுர்த்தி பெறுகின்ற குடும்பங்களைக் கொண்ட மாவட்டம்
• சாராயத் தவறணைகள் அதிகம் கொண்டு அதிக வருமானத்தினை ஏழைகளிடம் உறிஞ்சி வருடா வருடம் வருவாயை அள்ளிக்கொடுக்கும் மாவட்டம்.
• யுத்தம், அனர்த்தம் மற்றும் சமுகச் சீர்கேடுகள் என்பவற்றினால் அதிகமான அநாதரவான விதவைகளைக் கொண்ட மாவட்டம்
• கல்வியில் ஏனைய மாவட்டங்களுக்குள் பின்னிற்கும் முதன்மையான மாவட்டம்,
• அரசியலில் (தமிழ்) எடுப்பார் கைப்பிள்ளையாக அனாதரவாக பின்னிற்கும் மாவட்டம்
• யுத்தம் அனர்த்தங்களில் அதிக உயிர்களை காவுகொடுத்தும் அங்கவீனர்களையும் அதிகம் கொண்ட மாவட்டம்
• யானைகளின் அட்டகாசத்தில் அதிக சொத்து மற்றும் உயிர்ச்சேதத்தில் முன்னணியில் உள்ள மாவட்டம்.
• அதிக திறனற்றவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடிச்செல்லுகின்ற மாவட்டம்
• அதிக வீட்டுப்பணிப்பெண்கள் வெளிநாடுகளில் தொழில் புரியும் மாவட்டம்
இவ்வாறு ஒட்டு மொத்த விதத்திலும் போட்டி போட்டு முன்னேற முடியாத முட்டுக்கட்டைகளைக் கொண்ட ஒரு நலிவுற்ற அநாதரவாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை அதிகம் கொண்ட மாவட்டத்தை யார்தான் கண்டு கொள்கிறார்கள்?

இதற்கு மேலாக தொண்டு அடிப்படையில் கல்வி வழங்கும் நிறுவனங்கள் குறைவாக காணப்படுகின்றமை, நல்ல திறமைவாய்ந்த ஆசிரியர்கள் குறைவாகக் காணப்படுகின்றமை, குறைவாக உட்கட்டுமான வசதிகளை பாடசாலைகளில் கொண்டுள்ளமை, மாணவர்களின் இடைவிலகல், போக்குவரத்து வசதிக் குறைபாடுகள் என்பன போன்ற இன்னோரன்ன காரணங்களால் கல்வியில் பின்தங்கிய மக்கள் இன்னும் பின்தங்கிக்கொண்டு போவதனைக் காணலாம். இவற்றில் இருந்து மீண்டு வருவதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளமை, குறைந்தளவான சமுக பங்குபற்றுதல் போன்ற இன்னோரன்ன காரணங்கள் கல்வியில் பின்னிற்கும் சமுகத்தின் வேர்களாக குறிப்பாக இப்பிரதேசங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளது.


இந்த இடைவெளியை நிரப்பவென உழைத்து வருகின்ற ஒரு அமைப்புதான் கிழக்கிலங்கை இந்துசமய சமுக அபிவிருத்திச் சபையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய மூல காரணம் கல்வியில் வறியவர்கள் அதிகரித்துக்கொண்டு வருதலாகும். இதனை இல்லாதொழிக்கும் முனைப்பில் நடமாடும் கல்விச் சேவையினை திறமையான ஆசிரிய வளங்களை இணைத்துக் கொண்டு சிறிது சிறிதாக பல கோணங்களில் மக்களுடன் ஒன்றிணைந்து மக்கள் சக்தியாக மக்களை கல்வியில் விழிப்படைய செய்ய இயங்கிவருகிறது.


அதில் ஒரு செயற்பாடாக போரதீவுப் பற்று கோட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களை கவனத்தில்கொண்டு அவர்களது புலமைப் பரிசில் பரீட்சைக்காக இந்த செயலமர்வினை உங்கள் காலடியில் இலவசமாக கிழக்கிலங்கை இந்துசமய சமுக அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில், நிக் அண்ட் நெல்லி ஸ்த்தாபகத்தினரின் நிதி அணுசரணையில் கோட்டக்கல்விப் பணிமனையின் நெறியாழ்கையில் இவர்கள் ஒழுங்கு செய்து தந்துள்ளமை வரலாற்றில் இப்பகுதிகளில் முதல் முதல் நடக்கின்ற ஒரு நல்ல சம்பவமாகும்.

போரதீவுப்பற்று கோட்டைக்கல்வி அதிகாரி திரு கூ.பாலச்சந்திரன் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த திட்டம் பற்றி எடுத்து விளக்கும்போது, “இச்செயலமர்வானது பலகாலமமாக அந்தந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடன் கூடி ஆலோசித்து, பல சிரமங்களின் மத்தியில் இந்த ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்ட அமைப்பினரின் உதவியுடன் ஆறு மையப் பாடசாலைகளில் முறையே மட்/பட்டிருப்பு பெரியபோரதீவு பாரதி வித்தியாலயம், மட்/பட்டிருப்பு தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், மட்/பட்டிருப்பு 37 நவரிகிரி வித்தியாலயம், பாலையடிவட்டை, மட்/பட்டிருப்பு விஷ்ணுவித்தியாலயம், காக்காச்சிவட்டை, மட்/பட்டிருப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம், மண்டூ-13; மற்றும் மட்/பட்டிருப்பு ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயம்  ஆகியவற்றை சூழ உள்ள 32 பின்தங்கிய எல்லைக் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து, துறை தேர்ந்த ஆசிரியர்களை வரவழைத்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள சுமார் 673 மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு  மாதிரிப் பரீட்சையுடனான செயலமர்வினை நடாத்தி அதில் கருகலான பகுதிகளை பரீட்சையின் முடிவில் விளங்கப்படுத்தும் ஒரு நல்ல ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமாக இதை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.” என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வானது வெறுமனே பரீட்சையுடனான செயலமர்வாக மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மாணவருடனும் வருகைதந்த கிட்டத்தட்ட 600க்கு மேற்ப்பட்ட பெற்றோருக்குமான ஒரு கல்விப்புலன் சார்ந்த எதிர்காலத் தேவைப்பாட்டின் விழிப்பூட்டல் நிகழ்வாகவும் அமைந்து ஒரு பெரும் சமுகத்தை நெறிப்படுத்தியுள்ளது என்றே கூறக்கூடியதாய் உள்ளது.
இந்த செயலமர்வானது இந்த ஆறு பாடகாலைகளிலும் ஒரே நேரத்தில் அந்தந்த அதிபர் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்புடன் கிழக்கிலங்கை இந்துசமய சமுக அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்களின் உறுதுணையுடன் 27.05.2017 அன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு இது பி.ப 2.00 மணிவரை தொடர்ந்து நடைபெற்றது. இதன் உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு கிழக்கிலங்கை இந்துசமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் நடாத்திவைக்கப்பட்டது. அதில் இவ்வமைப்பின் செயற்பாடுகள் அதன் விரிவாக்கம் என்பன பற்றி எடுத்துக்கூறியிருந்தார்.
இதன்போது அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சில் உள்ள தேசிய மனித வளங்கள் அபிவிருத்திச்சபையின் உதவிப்பணிப்பாளர் திரு.சி.தணிகசீலன் அவர்கள் கல்வியின் முக்கியம் அதன் மூலமான எதிர்கால வாய்ப்புகள் என்பன பற்றி தெளிவாக மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்து விளக்கினார். அத்துடன் “படித்தவர்கள் படித்த மக்களை உருவாக்குவதன் மூலமே அவர்களுக்கு உதவிய சமுகத்திற்கு நன்றி உடையவர்களாகின்றோம்.” எனவும் ஆர்வத்துடன் தொண்டாற்றி வரும் அனைத்து பிரிவினரையும் இதன்போது நன்றியுணர்வோடு பாராட்டினார். இவர்களுடன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என்போரும் இதில் பங்குபற்றி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்திட்டங்களில் அனைத்து அமைப்புகளும் கைகோர்த்து இந்த நற்பணிகளை செய்வதற்கு நாமும் உதவினோம் என்ற நற்பெயரை பெற்றவராவோம். அத்துடன் இதை எமது கடமையாக சிரம் கொண்டு கல்வியில் வறுமையை எம் சமுகத்தினிடையே இல்லாதொழிக்க சங்கல்பம் கொள்வோம்.