இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தமிழர்களை அரசாங்கத்திடமே கேட்க முடியும்

இறுதி கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்ட உறவுகளை அரசாங்கத்திடமே கேட்கமுடியும் என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்..

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள்   கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது பெற்றோர்கள்   போராடிவரும் நிலையில்வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேயின் கருத்து  பாதிக்கப்பட்ட மக்களை மேலும்  வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக  அவர்  குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி   வடக்கு, கிழக்கில்  காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினர் மற்றும் ஆயுத குழுக்களினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில்  பல அமைப்புக்களின் தலைவர்கள் உயிருடன் இல்லாத நிலையில்காணாமல் போனோர் தொடர்பில் எவ்வாறு விசாரணைகளை மேற்கொள்வது என்றும் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையிலே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற விதமாக கருத்துக்களை வெளியிட கூடாது என  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பாக   சாட்சியங்கள் உள்ளதாகவும்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது ஒரு நாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தாலும் அவர்களையும் தங்களிடம் சரணடையுமாறு இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் உதவியாளராக  இருந்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பலர் சரணடைந்தார்கள்.

அவ்வாறு சரணடைந்தோர்களுக்கு என்ன நடந்ததுஉண்மையில் அவர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையாஅவர்கள் இருந்தால் எங்கிருக்கிறார்கள்இல்லை என்றால் என்ன நடந்ததுஎப்படி நடந்ததுஎந்த இராணுவத்தால் நடந்தது என்ற விபரத்தை இந்த அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்  நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்