சிறுமியர் மீது நடாத்தப்பட்ட பாலியல் வன் கொடுமையை , ஒரு சமூகத்தின் மீதான குற்றமாக காட்ட முனையும் போக்கு, ஆபத்தானது.வருந்தத்தக்கது.

மல்லிகைத்தீவு சிறுமியர் மீது நடாத்தப்பட்ட பாலியல் வன் கொடுமையை , ஒரு சமூகத்தின் மீதான குற்றமாக காட்ட முனையும் போக்கு, ஆபத்தானது.வருந்தத்தக்கது.

சிலரின் நியாயம் மிக்க கோபங்கள், உணர்ச்சிகள் , தவறான சிந்தனையை நோக்கி நகர்வதற்கு இடம் கொடுப்பதை காணமுடிகிறது.

முஸ்லிம் மக்களோடான எமது உறவும்- சகோதரத்துவமும் பலவீனமானதற்கு சாத்தியமான எந்த கருத்துக்களையும் , நாம் புறக்கணிப்பது அவசியம்..

இவ்வாறான உணர்ச்சிகள், கோபங்கள் சில வேளைகளில் எம்மை இருட்டுக்குள் புதைத்துவிடும்.

இனமுரண்பாடுகளை, சமுக முரண்பாடுகளை கூர்மையாக்க , “பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின்” இயங்கும் நாசகார சக்திகளுக்கு, இவை வாய்ப்பாக அமைந்து விடும்.

நிதானமும், எச்சரிக்கையும் அவசிய தேவை.

அதே வேளை, இந்த சின்னஞ் சிறுமிகள் மீதான பாலியல் வன் கொடுமை, தமிழ் சமுகத்தை சேர்ந்த காமுகர்களினால் , முஸ்லிம் சமுகத்து சின்னஞ் சிறுமிகள் மீது நடாத்தப்பட்ட கொடும் துயரம் நடந்திருந்தால், எதிர்வினைகள் எவ்வாறு இருந்திருக்கும்..?

நினைத்துப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளான சில படைப்பாளிகளினதும், – புத்திசீவிகளினதும், பேரினவாதத்தின் ஒத்தோடிகளினதும் இணந்த “கொடூர நச்சுக் குரல்களின் சத்தம்”, ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மீதும் , தமிழ் தேசியத்தின் மீதும் கொட்டப்பட்டிருக்கும்.

இதுதான் இன்றைய அபாய அரசியல்.

ஆனால், இவ்வாறான தருணங்களில் எம் அன்புக்குரிய முஸ்லிம் சமூகமும், தமிழ்ச் சமூகமும் நிதானமாகவும் -நீதியோடும் நடந்து கொள்வது நம்பிக்கையை ,சந்தோசத்ததை தருகின்றது