இன்று சிக்கியிருப்பது வர்த்தகர் என்ற பிரிவினருக்குள் உள்ள ஒரு ஹாஜியார் மாத்திரம்தான்

அன்புள்ள ஹாஜியார், தாஈ, முப்தி மற்றும் இன்ன பிற வகையறாக்களுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் .

மட்டக்களப்பிலுள்ள பிரபல உணவு விடுதி ஒன்றில் கழிப்பறையினுள் இறைச்சி வெட்டப்பட்டிருப்பதனை சுகாதாரப் பிரிவினர் சுற்றி வளைத்த ஒரு காணொளியை இன்று காலை பார்க்கக் கிடைத்தது.
விடுதியின் உரிமையாளர் ஒரு ஹாஜியார் என்பதனை அங்கு இடம்பெறுகின்ற உரையாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது..

இதனைப் பார்க்கும்போது ஒரு சராசரி மனிதனாக எனக்குள்ளும் தார்மீக கோபம் வருகின்ற அதேவேளை வெட்கமும் என்னை ஆட்க்கொள்கிறது.

எனது சிறு பராய, கடந்து போன மூதாதையரின் சமூக சூழலை நினைத்துப் பார்க்கின்றேன்.

எனது மூத்த தலைமுறையினர் உலகக் கல்வியிலும் சரி, ஆன்மீகக் கல்வியிலும் சரி பெரிதாக ஒன்றும் படித்தவர்களல்லர். பாடசாலைக் கல்வி சராசரியாக ஐந்தாம் தரம் அல்லது எழுத வாசிக்கத் தெரிகின்ற அளவு. ஆன்மீகக் கல்வியும் குர்ஆனை ஓதுவதற்கு தெரிந்திருப்பதோடு சரி. ஆனாலும் அவர்கள் தமக்கான ஆன்மீக விழுமியங்களை தமது தனிப்பட்ட வாழ்வில் சரியாக கடைப்பிடித்து நடந்து கொண்டதோடு அதற்கேற்றாற்ப்போல் சமூக வாழ்விலும் நேர்மையும், நாணயமும் மிக்கவர்களாக இருந்தனர்.

இத்தகைய பண்புகளையுடைய வணிகர்களிடத்தில் மக்கள் தமது பெறுமதிமிக்க சொத்துக்களை பாதுகாப்புக்காக விட்டுச் சென்றமை வரலாறு. தவிரவும் இவர்களிடம் தரமான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எதுவித விளம்பரங்களும் இன்றி மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவர்களின் நாணயமே அவர்களுக்கான விளம்பரத்தை கொடுத்தது.

சமகாலத்தை பார்க்கின்றேன். அத்தனையும் தலை கீழ்.

வணிக நுணுக்கங்களை தொழில்முறை ரீதியாக தெரிந்து வைத்துள்ளனர். ஆன்மீக விடயங்கள் அனைத்தும் அத்துப்படி. ஒரு விடயம் எந்த கிரந்தத்தில் எத்தனையாம் பக்கம் எத்தனையாவது வரியில் யாரால் எழுதப்பட்டிருக்கிறது என்று நொடிப் பொழுதில் ஒப்புவிக்கின்ற அளவுக்கு ஆன்மீக அறிவைப் பெற்றிருக்கின்றார்கள்.

நீண்ட தாடி, நீளமான ஜூப்பா, நெற்றியில் “ஸுஜுது” செய்த தழும்பு இவையே ஒரு உண்மையான முஸ்லிமின் அடையாளமாக சித்தரிக்கப்படுவதோடு அதுவே ஒரு பேஷனாகவும் மாறியிருக்கிறது. தவிரவும் வருடத்துக்கு ஒரு ஹஜ், உம்ரா என்று தமது ஆன்மீக வழிபாடுகளை இறுக்கமாகப் பின்பற்றுபவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

ஆனாலும் தனது தொழுகை, ஹஜ் மூலம் தனிமனித வாழ்விலும், சமூக வாழ்விலும் எத்தகைய மாற்றம் நிகழ வேண்டுமோ அது மட்டும் காணாமல் போய் விடுகிறது.

அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இன்று இந்த ஹாஜியார் தனக்குரிய தார்மீக பொறுப்பினை உதாசீனம் செய்து வாடிக்கையாளருக்கு பரிமாறுகின்ற உணவு தொடர்பான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்திருக்க மாட்டார். தவிரவும் அவர் செய்திருப்பது மாபெரும் நம்பிக்கை மோசடியாகும்.

இன்று சிக்கியிருப்பது வர்த்தகர் என்ற பிரிவினருக்குள் உள்ள ஒரு ஹாஜியார் மாத்திரம்தான். இது போன்ற பல பாத்திரங்கள் வெவ்வேறு துறைகளுக்குள்ளும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தகைய யாரும் நான் மேலே விழித்திருக்கும் பட்டியலில் இருந்தால், உங்களிடம் நான் வினயமாக வேண்டுவது இத்தகைய கீழ் தரமான வேலைகளை செய்வதற்காகவும் அதனை மறைப்பதற்காகவும் நான் மேலே விபரித்திருக்கும் ஆடை அலங்காரங்களையும், பட்டங்களையும் உங்களுக்கான பாதுகாப்பான வேடமாகவும், கேடயமாகவும் பயன்படுத்த வேண்டாம் என்பதாகும்.

(எல்லோருமே இப்படியானவர்கள்தான் என்பது இதன் அர்த்தமாகாது. ஒரு சிறு பிரிவினர் புரிகின்ற ஈனச் செயல்கள் எல்லோரையுமே தலை குனிவுக்கும் அசௌகரியத்துக்கும் உள்ளாக்குகின்றது. ஆகவே, உள்ளக விமர்சனம் இங்கு அவசியமாகிறது. எனவே , நான் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றேன் என்று யாரும் என்னோடு கட்டப் பஞ்சாயத்து செய்ய வர வேண்டாம்.)

நன்றி.

வஸ்ஸலாம்.

Abdul Waji