கிழக்கு முதல்வரே கிழக்கில் தமிழ் மாணவர்களும் கல்விபயில்கின்றார்கள்.ஒரு கண்ணை தமிழர் மீதும் செலுத்துங்கள்.

முறையற்ற ஆசிரிய இடமாற்றங்களும்கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும்

கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் செய்யபபட்டிருந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.ஏற்கனவே முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகுந்த வளப் பற்றாக்குறையுடன் கல்வியில் மிகவும் மந்த நிலையில் உள்ள இப்பகுதிகளே கிழக்கு மாகாண கல்வித் திணைகள நிருவாகத்தின் விளையாட்டுக் களமாக அமைந்து இருப்பது மிகவும் வேதனையான விடயமாகவுள்ளது. குறிப்பிட்ட சமுகமொன்றின் ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கான வெற்றிடமாகவே இந்த வலயங்கள் பயன்படுத்தப் படுகின்றமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது..

கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள முஸ்லீம் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் அனுசரனை மற்றும் தந்திரயோபாயங்களுடன் இந்த கஷ்டப் பிரதேச வலயங்களில் காணப்படும் வெற்றிடங்களை பயன்படுத்தி நியமனம் பெறும் முஸ்லீம் ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவர்.

இவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையோர் இக்காலப் பகுதிக்குள் ஒழுங்காக சமுகமளிப்பதுமில்லை அல்லது படிப்பிப்பதும் இல்லை.அதிலும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் சொந்தகாரர்களும் நெருங்கியோரும் பதவி ஏற்ற அடுத்த சில நாட்களிலேயே அவர்களது ஊரில் உள்ள பாடசாலைக்கு தற்காலிக இணைப்பு பெற்று சென்று விடுவார்கள்.ஆக இவர்களுக்கு சம்பளம், கல்குடா அல்லது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், வேலையோ சம்மாந்துறை,அக்கரைப்பற்று கல்முனையில். இந்த வலயங்களில் cadre full ஆனால் ஆசிரியர் தட்டுப்பாடு. இவ்வாறான செயற்பாடுகளுக்கு, முன்னர் இவ்வலயங்களில் பணியாற்றிய வலய கல்விப் பணிப்பாளர்களும் உடந்தையாக  இருந்துள்ளனரா?  தமது அற்ப ஆசைகளுக்க இவர்கள் . விலை போயுள்ளார்களா?  என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. மேலும் திருகோணமலை மாவட்டத்தின் பல கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட தமிழ் ஆசிரியர்கள் பலர் பத்து,பதினைந்து வருடங்களாக கடமையாற்றி வரும் நிலையில்,பல வருடங்களாக தமது சொந்தப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் கோரி வரும் போதும் இவர்களது கோரிக்கைகள் இதுவரை கவனிக்கப் படவில்லை.

குறித்த சமுதாயத்தின் நலனுக்காக, மாணவர்களின் கல்வி நிலையினை கருத்தில் கொள்ளாது வருடத்தின் இடைநடுவில் இடமாற்றம் வழங்கப்பட்டு எப்போதும் இல்லாதவாறு மாகாண கல்வித் திணைக்களத்தாலேயே விடுவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர்கள் தமது பாடசாலையை விட்டுச் சென்ற பின்னர் தான் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு தெரியும், இவர்கள் வலயத்தை விட்டுச் சென்றமை.கணித விஞ்ஞான ஆசிரியர்கள் திடிரென தம்மை கைவிட்டுச் சென்றமையினால் ,வருகின்ற மார்கழி மாதம் க.பொ.த சா.த எழுதவிருக்கும் மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

இந்த முறையற்ற இடமாற்றங்களை இடைநிறுத்த பல்வேறு தரப்பினரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.பிரச்சினையினை புரிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் மேற்படி இடமாற்றங்களை இரத்துச் செய்வதாக அறிவித்த போதும்,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் இவ்விடமாற்றங்கள் இரத்துச் செய்யவில்லை என அறிவித்துள்ளார்.

இந்த இடமாற்றங்களை இடைநிறுத்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு பல அழுத்தங்கள் அவரது கட்சிக்குள் இருந்தும் கொடுக்கப்பட்ட போதிலும் அவர் தனது வாயில் பிளாஸ்டர் ஒட்டியது போல்,வாயை திறக்காமல் உள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சரை விட, தாம் அதிகாரம் மிக்கவராக காட்டிக் கொள்கிறார் மாகாண கல்விப் பணிப்பாளர்.

கிழக்கில் புரிந்துணர்வு அடிப்படையில் ஆட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் முஸ்லீம் அரசியல்வாதிகளினதும் முஸ்லீம் அதிகாரிகளினதும் இவ்வாறான செயல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் தமிழ் மாகாண சபை உறுபினர்களே,அமைச்சர்களே,இந்த கையாலாகாத்தனம் இன்னும் உங்களுக்கு தேவைதானா? இன்னும் தேவையா இந்த புரிந்துணர்வு ஆட்சி? எடுத்ததுகெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யும் கிழக்கு அரசியல்வாதிகளே, தமிழ் மாணவர்களுக்கு செய்யப்பட்ட துரோகத்துக்கு எதிராக இன்னும் ஏன் நீங்கள் கிளர்ந்தெழவில்லை.

கிழக்கு முதல்வரே கிழக்கில் தமிழ் மாணவர்களும் கல்விபயில்கின்றார்கள்.ஒரு கண்ணை தமிழர் மீதும் செலுத்துங்கள்.