மாணவர்கள் மத்தியில் கல்வியை ஆண்மீகத்துடன் இணைத்தல் தொடர்பாக “என்னில் இருந்து எமக்கு” பயிற்சித் திட்டம்…

தற்போதைய கல்விச் சூழல் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மாத்திரமே கருத்தில் கொள்கின்றதே தவிர ஒழுக்க சிந்தனையை ஏற்படுத்த தவறுகின்றது. எனவே கல்வி அடைவு மட்டத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கு ஒழுக்க சிந்தனைகளையும் தோற்றுவிக்க வேண்டும் என தாயுள்ளம் பவுண்டேசன் அமைப்பின் முகாமையாளர் திருமதி சித்திரா கார்த்திக் அம்மணி தெரிவித்தார்..

இந்தியாவின் ஆனந்தா ஆச்சிரம தாயுள்ளம் பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்கள் மத்தியில் கல்வியுடன் சேர்த்து நற்பண்புகளையும், ஒழுக்கவிழுமியங்களையும் ஊக்குவிக்கும் செய்திட்டமான “என்னில் இருந்து எமக்கும்” பயிற்சித் திட்டம் தொடர்பில் நேற்றைய தினம் மைலம்பாவெளியிலுள்ள கருணாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 24ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணாலத்தில் இடம்பெற்ற பயிற்சி நெறியில் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை, மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, கல்லடி விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்கள், மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு விதமான நல்ல மாற்றங்களை மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் அதிபர்கள் மத்தியிலும் காணக்கூடியதாக இருந்ததாக பயிற்சிக் குழுவினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இச் செயற்திட்டத்தினை விளக்கும் முகமான ஊடக சந்திப்பொன்றும் கருணாலயத்தில் அதன் முகாமையாளர் முருகதாஸ் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன் போது இந்த செயற்திட்டத்தின் காரண கர்த்தாக்களான தாயுள்ளம் பவுண்டேசன் அமைப்பின் முகாமையாளர் திருமதி சித்திரா கார்த்திக் அம்மணி, அதன் வளவாளர்களான கார்த்திக் மற்றும் திருமதி சுகுணா கிரன் அம்மணி, மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செயற்திட்டம் தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தச் செயற்திட்டமானது தமிழ் நாட்டில் 04 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் பிரதிபலிப்பை உணர்ந்து இந்திய அராசங்கம் இதனை அங்கீகரித்திருக்கின்றது. தமிழ் நாட்டில் இது வரையில் 5000க்கும் மேற்பட்ட பாடசாலைகள், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 5 லெட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த கல்வியுடன் இணைந்து நல்லொழுக்கத்தினையும் ஊக்குவித்தல் செயற்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இச்செயற்திட்டத்தினை வெளிநாடுகளில் செயற்படுத்த வேண்டும் என எமது ஆனந்த ஆச்சிரம சுவாமி முக்தானந்தா ஜீ அவர்களின் பாரிய சிந்தனையில் முதன் முதலாக இலங்கையில் மட்டக்களப்பில் இந்த செயற்திட்டத்தை கருணாலயம் அமைப்புடன் இணைந்து நடாத்துகின்றோம்.

இது தொடர்பில் இங்குள்ள கல்விப்புலம் இதற்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கியதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பலரினதும் பங்களிப்பு எம்மை பிரமிக்கச் செய்தது. இங்குள்ள மாணவர்கள் எளிதில் இவற்றை உணர்ந்து புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் இருக்கின்றார்கள். இது இறைவன் கொடுத்த வரமாகவே கருதுகின்றோம். பயிற்சி முடிவில் மாணவர்களின் வெளிப்படுத்துகைகள் அவர்களின் உணர்வுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டோம்.

இச் செயறபாட்டினை தனித்து நாம் செயற்படுத்த முடியாது என்பதன் காரணமாக பாடசாலைகளின் கல்வியினூடாக இதனைக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றோம். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் நல்ல மனநிலையை நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துவதே எமது நோக்கம். மாணவர்களின் குடும்ப மட்டத்திலும் இவ்வாறான சிந்தனையைக் கொண்டு வருதல் வேண்டும்.

தற்போதைய கல்விச் சூழல் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மாத்திரமே கருத்தில் கொள்கின்றதே தவிர ஒழுக்க சிந்தனையை ஏற்படுத்த தவறுகின்றது. எனவே கல்வி அடைவு மட்டத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கு ஒழுக்க சிந்தனைகளையும் தோற்றுவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சிந்தனைகளுக்கான உணவு கொடுக்கப்படுதல் தற்போது குறைவு அதற்கு இடம்கொடுக்க வேண்டும். தற்போதைய கல்வித் திட்டத்தில் நவீன போக்குக்குரிய வேகமான முறைமைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு அறிவுக்கும் திறனுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்படுகின்றதே தவிர மனப்பாங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த செயற்திட்டத்தின் மூலம் அதனை ஏற்படுத்துவதே நோக்கம்.

இந்த விடயத்தினை அரசாங்கம் உள்வாங்க வேண்டும். இதற்கு கல்விப் புலத்தில் உள்ளவர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து குறைந்தது மாகாண மட்டத்திலாவது இந்தச் செயற்திட்டத்தினை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது கட்டாயமாக எமது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் தேவைப்பாடான பயிற்சி நெறி. கல்வி மட்டத்தில் இருந்துதான் இத்தகைய மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்த வேண்டும் அதனால் தான் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களை நாங்கள் முதற்கண் தெரிவு செய்தோம்.

இதனை அரசு மட்டம் வரை கொண்டு செல்வதற்கு ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும் என இதன் போது அங்கு கலந்து கொண்ட பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இச்செற்பாடானது மாணவர்கள் மத்தியிலும் சிறந்த மாற்றத்தை உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பலரும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.