கதிர்காம பாதயாத்திரையும் மோர்த் தேங்காய்’ உணவும் மனம் திறக்கின்றார் தியாகராசா.

அது அந்தக்காலம்!

காடுமேடு கடந்து பாதயாத்திரை!

VAYIRAMUTHU THUSANTHAN

“பத்துநாளில் பதியை அடைத்து விடுவோம். அரோகரா சத்தமும் சாமி என்ற உச்சரிப்பும் கந்தனின் நினைப்புமே எம்மிடத்தில் இருக்கும்” என்கிறார் வருடாந்தம் கதிர்காம கந்தனை தரிசிக்க 10 நாட்களாக காடு மேடு கடந்து நடந்தே செல்லும் அடியவர் ஒருவர்.

கதிர்காமம் செல்வதற்கு முப்பது நாட்களுக்கு முன்னமே செல்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்களாம். தமக்கான உணவுகளையும் எடுத்துக் கொள்வர். குறிப்பாக ‘மோர்த் தேங்காய்’ என்கின்ற உணவினை ஒரு மாதம் முன்னமே தயார்படுத்த தொடங்கி விடுவார்களாம்.

“மோர்த் தேங்காய் என்றால் என்ன?”
நீண்ட காலமாக நடைப்பயணத்தில் கதிர்காமம் சென்று வரும் மா. தியாகராசா
விளக்குகிறார்.

மாசிலாமணி தியாகராசா

“பெருப்பமான தேங்காயினை மரத்திலிருந்து பறித்து அவற்றின் மட்டைகளை உரித்து தும்புகளையும் அகற்றி தேங்காயின் மேல் சிறிய துவாரம்ஒன்றினை இட்டு உள்ளே உள்ள இளநீரை வெளியே எடுத்துக் கொள்வர். பின்னர் பசுப்பாலை காய்ச்சி ஓரளவு ஆறிய பின் (நகச்சுடு) அதை அந்த துவாரத்தினூடாக தேங்காய்க்குள்ளே ஊற்றுவோம். பின்னர் அதுனுடன் ‘உறைமோரை’ விடுவோம்;. (உறைமோர் என்பது ஏற்கனவே புளித்த தயிர்.) பின்னர் அந்த துவாரத்தை தென்னை மரத்தின் பாளையில் ஒரு காம்பை வெட்டி எடுத்து அதனால் அடைப்போம். இதனை ‘குடுதி இடுதல்’ என்போம். வேறு உணவுகளுடன் இது முக்கியமாக இருக்கும். கதிர்காமம் செல்லும் போது எடுத்துச் செல்வோம்.”என்கிறார்.

கதிர்காமம் செல்பவர்கள், தம்மிடம் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தையும் எழுதி தமது குடும்பத்தாருக்கு கொடுத்துவிட்டுதான் செல்வர்.

அதுமட்டும்மல்லாமல் தாம் அணிந்திருக்கின்ற தங்க ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றி தமது பிள்ளைகள் உறவினர்களிடம் கொடுத்துவிட்டு செல்வர். இந்த யாத்திரையானது கடமைகளை முடித்துக்கொண்டு சொர்க்கத்திற்கு செல்வது போன்றது. போகும் இடத்தில் எதுவும் நடக்கலாம். அதனால் இப்படிச் செய்கிறார்களாம். வீட்டைவிட்டுச் செல்லும் போது அழுதுபுலம்பிதான் அவர்களை வழியனுப்புவர். தமது உறவினர்களோடு இருப்பது அன்றைக்குதான் கடைசி நாள் என கதிர்காமத்திற்கு புறப்படும் நாளை நினைத்துக்கொள்வார்களாம். இறைவனின் பக்தியோடு மட்டும் செல்வார்களாம்.

செல்லும் போது தமக்கு தேவையான உணவு உடைகளை ஒரு ‘அடைப்பை’யினிலே இட்டுக்கொள்வர். (அடைப்பை என்பது, வெள்ளை நிறத் துணியினால் தைக்கப்பட்ட பை, பின்னர் அதனை காவியிலே இட்டு காவிநிறப் பையாக ஆக்கிக்கொள்வர்.) பொருட்களை உள்ளே வைத்தபின் நடுவிலே இருபக்கமும் சம பாரத்தினை வைத்துக் கட்டு ஒன்றினை இட்டுஇ தோளிலிலே சுமந்து கொண்டு செல்வர்.

பணத்தினை பாதுகாத்து வைத்துக்கொள்வதற்காக அரைக்கால் என்ற பையை பயன்படுத்தி உள்ளனர். அரைக்கால் என்பதும் ஒரு துணியில் தைக்கப்பட்ட பை. இது இடுப்பின் சுற்றளவிற்கு ஏற்ப தைத்துக்கொள்வர். அதற்குள்ளே பணத்தினை இட்டு இடுப்பிலே கட்டிக்கொள்வர்.
செல்லும்போது ஒருவரையொருவர் பெயர்சொல்லி அழைப்பதில்லை. ‘சாமி’ என்றே எல்லோரையும் அழைப்பர். அவர்களின் உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ப ‘சின்னசாமி’ ,‘பெரியசாமி’ என்றே அழைக்கின்ற முறை இருக்கின்றது. அதேபோன்று அரோகரா சத்தமும் இறைவனை பற்றியும் தாம் படும் துயரங்களையும் பாடி செல்வர். எப்போதும் இவர்களிடம் இறைசிந்தனை மட்டுமே காணப்படும். வேண்டிச் சென்றதை இறைவன் எல்லோருக்கும் வழங்கியிருக்கின்றான். என்கின்றனர். அதேவேளை கதிர்காமத்திற்கு செல்வதற்கு எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லையாம். இறைவனது ஆசியிருந்தால்தான் கிடைக்கும். என்ற நம்பிக்கை இவர்களிடம் இருக்கிறது. அதற்கு ஒரு கதையும் வைத்திருக்கிறார்கள்.

‘கதிர்காமத்திற்கு மிக அருகில் உள்ள கட்டுகாமம் எனும் இடத்தில் இருந்த ஒரு பெண்கதிர்காமத்திற்கு இன்றைக்கு செல்வோம் நாளைக்கு செல்வோம் சமைத்து முடிய செல்வோம் என்று கூறிக் கூறிக் கொண்டு இருந்தாளாம். அவளுக்கு வயதும் போய்விட்டது. கடைசிவரை அவளால் செல்லமுடியவில்லை. செல்லாமலே அவள் இறந்துவிட்டாள்.’ என்ற இக்கதையை கதிர்காமம் யாத்திரை செய்யும் யாத்திரையாளர்கள் கூறுகின்றனர். இதனைத்தான் ‘கட்டுகாமத்து கிழவி கதிர்காமம் பார்க்கமால் செத்தா” அதுபோலதான் உங்களையும் இறைவன் அழைக்கல்ல என கதிர்காமம் சென்றவர்கள் செல்லாதவர்களிடம் இப்போதும் கூறுவதுண்டு.

“போகும் போது அரவங்களினை பார்த்தே நடந்து செல்வோம்;. (அரவம் என்பது ஏற்கனவே மனிதர்கள் நடமாடியதால் உருவாகிய சிறு வழிப்பாதை) அரவங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரவங்கள் உள்ள இடங்களில் முன்னால் சென்றவர்கள் மரக்கொத்துக்களை முறித்து கீழே இட்டுவிட்டு செல்வர். அவற்றினை பார்த்தே பின்னால் வருபவர்கள் செல்வோம்.” என்கிறார் பல வருடங்களாக பாதயாத்திரை சென்றுவரும் மாமாங்கபிள்ளை கந்தசாமி(55)

மாமாங்கபிள்ளை கந்தசாமி

செல்லும் போது ஏற்கனவே சென்றவர்கள் உணவு சமைத்து தங்கியிருந்தமைக்கான தடயங்கள் காணப்படும் இடத்தில் இருந்து  உணவினை சமைத்தும் இரவுகளில் தங்கியும் செல்வார்கள். செல்லும் வழியில் மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாகியும் உடல் நோய் காரணமாகவும் சிலர் உயிரிழப்பதும் உண்டு. என்றும் கூறுகின்றனர். அவ்வாறு உயிரிழந்தவர்களை காட்டிலே உள்ள ‘வீரமர கம்புகளை’ அடுக்கி அதில் உடலை வைத்து எரிப்பர். அன்றிரவு அவ் வெளிச்சத்திலே இருந்து கொள்வர். பின்னர் நடந்து செல்லும் வழியில் வரும் ஆறுகளில் மூழ்கி தமது யாத்திரையைத் தொடர்வர். இவ்வாறு நடந்து செல்கையில் இன மத பேதமின்றி பலரும் இதில் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். இவை 30 வருடங்களுக்கு முந்திய கதை.


ஒவ்வொரு வருடமும் கதிர்காம ஆலயத்தின் கொடியேற்றம் யூலையில் நடைபெறும். இந்தவருடம் யூலை மாதம் 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து ஓகஸ்ட் மாதம் 08ம் திகதி நிறைவு பெறவுள்ளது.

தற்போது வாகனங்களில் கதிர்காமம் சென்றுவருபவர்களின் தொகை மிக அதிகமானது. ஆனாலும் பாதயாத்திரையையும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பலர் இன்னும் இருக்கின்றனர். அதற்காக கிராமத்திலுள்ள அமைப்புகள்சில ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கின்றது என மா.தியாகராசா குறிப்பிடுகிறார்.