தமிழ்தெரியாத போக்குவரத்து பொலிஸாரால் சாரதிகளுக்கு அசௌகரியம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து பொலிஸார் சிலர் தமிழ் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் நாள்தோறும் சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு  திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் மாகாணசபை உறுப்பினர் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தெரியாத பொலிஸார் சிலர் கடமையில் ஈடுபட்டுள்ளமையினால் மொழிதெரியாத சாரதிகள் நாள்தோறும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். அக்கடித்தினை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் செயலாளரினால் சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தெரிந்த பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறும், அல்லது பொலிஸாருக்கு தமிழை கற்பிக்குமாறும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான பிரதியும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை குறித்த பிரச்சினை இதுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை.
இன்றும் ஒருசில தமிழ்தெரியாத பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருக்கின்றமையினால்; நேரடியாக அசௌகரியங்களை தமிழ்பேசும் சாரதிகள் எதிர்நோக்கி வருகின்றனர். மாவட்டத்தில் சில பகுதிகளில் தலைகவசம் அணியாமலும் சாரதிகள் பயணிக்கின்ற நிலைமையும் இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை கவனெத்திலெடுத்து சட்டங்களை முறையாக பயன்படுத்தி, மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, காடழிப்பு, மரம் கடத்தல், போதைப்பொருள் பாவனை போன்ற குற்றச்செயல்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்றார்.