மட்டு. உயர் தொழில் நுட்பக்கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்களால் முதல் கட்ட பொருள்கள் கையளிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கொன நிவாரணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் தொகுதி பொருள்களை இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்கள் மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் கையளித்தனர்.
இன்றைய தினம் மாலை மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்களால் காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென பொருள்கள் கையளிக்கப்பட்ட வேளை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.
இத் தொகுதியில் பொதி செய்யப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கான பொருள்கள், மற்றும் அரிசி அடங்கலான சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் கையளிக்கப்பட்டன.
நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலத்தில் நடைபெற்றது.
காலி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைச் சேகரிப்பதற்கான நிலையம் மட்டக்களப்பு காந்திப் பூங்காலில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.
அங்கு சென்று தங்களது நிவாரணப்பொருள்களை பொது மக்களும் அமைப்புகளும் வழங்க முடியும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அப் பொருள்கள் வெள்ளிக்கிழமை காலை வரை சேகரிக்கப்பட்டு காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு செல்லப்பட்டு நேரடியாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன இணைந்ததாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், நிவாரணங்களை வழங்குபவர்கள் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் – 0772681366, வி.பிரதீபன் 0776109222, எஸ்.மாமாங்கராஜா 0772662725 ஆகியோரைத் தொடர்புகொள்ளவும் முடியும்.
மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர் பிரிவுகளினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களின் ஒருதொகுதி ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஊடாக அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.