மூதூர் சம்பவம் தொடர்பில் விசாரணை முதலமைச்சர் நடவடிக்கை

திருகோணமலை மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..

துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிபொலிஸ்மா அதிபர் கிழக்கு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தற்போது விசேட குழுவொன்றை நியமித்து சம்பவம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இந்தக் குழுவினர் கிடைக்கப் பெற்றுள்ள சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களுக்கு மேலதிகமான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்,

இவ்வாறான சிறுமிகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சம்பவங்களின் குற்றவாளிகள் மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்,

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் நிரூபிக்கப்படும் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் வலியுறுத்தியுள்ளார்,