“போதையற்ற தேசம்” உருவாக்கலும் “தேசிய மதுக் கொள்கை” அமுலாக்கலும்

போதைப்பொருள் பாவனை என்பது இலங்கைத் தீவின் மிக முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாகும். பொருளாதாரம், கல்வி, கலாசாரம், சுகாதாரம், மற்றும் சமூகம் போன்ற அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாக அமைகின்றது. போதைப்பொருட்களின் பிரச்சனை மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பிரச்சனைகளை கையாள்வதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவங்கள் ஏறத்தாள ஒரே மாதிரியானவையாகும். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை காலனித்துவ அதிகாரங்கள் ஓப்பியம் போதைப்பொருள் பாவனையை தமக்கு வருமானமீட்டும் ஒரு முறையாக நெறிப்படுத்தியிருந்தன..

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஓப்பியம், கஞ்சா போன்ற இவ்வாறான போதைப்பொருள்களின் பாவனையை குறைப்பதற்கு பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில், இனப்பிரச்சினையின் தோற்றத்தினால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலில் இலங்கையர்களின் ஈடுபாடு வெகுவாக அதிகரித்து,நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை இலகுவாக்கி அதன் பாவனையை அகலக்கால் பதிக்கச் செய்தது.அது மேம்பட்டு தற்போது “தங்கப்பிறை” (Golden Crescent) எனும் பிராந்தியத்தில் இருந்து வெளியாகும் “பழுப்பு சீனி” (Brown Sugar) என்று அழைக்கப்படும் தென்மேற்காசிய ஹெரோயின், பிரதானமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு ஐரோப்பாவிற்கு கடத்தும் மையமாக இலங்கையை இட்டுச்சென்றுள்ளது.

“போதைவஸ்து பாவனை”

1980 வரை போதைவஸ்து பாவனை அடிக்கடி வெளிநாடு சென்று வருபவர்கள் மற்றும் இங்கு வரும் உல்லாசப் பயணிகள் சிலரிடம் மட்டுமே இருந்துள்ளது. எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் அது இங்கு பல்வேறு சமூகப் பிரிவுகள் மத்தியில் பரவ ஆரம்பித்ததுடன், அது முதல் அவ்வெண்ணிக்கை தொடர்ந்து வளரச்சியடைந்து வந்துள்ளது. கொழும்பு பகுதியிலிருந்து இத்தீய பழக்கம் கிராமப் புறங்களுக்கும், சாதி, மத, இன வேறுபாடோ பிரதேச வேறுபாடோ இன்றி பரவி இன்றளவில் தேசத்தின் பெரும் சுகாதார மற்றும் சமூகப் பிரச்சனையாக பூதாகரமாக வளர்ந்து அரசுக்கும் சட்டத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த போதைவஸ்துகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சா முக்கிய இடம் வகிக்கின்றது.இதில்இலங்கையில் சட்டவிரோதமாகப் பயிரிடப்படும் ஒரேயொரு போதைவஸ்து கஞ்சாவாகும்..

போதைவஸ்துக்களின் புழக்கம் மற்றும் கடத்தலின் அளவைக்கூறும் மானியாக இருப்பது, அதிகாரம் பெற்ற அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைவஸ்துக்களின் கைப்பற்றல்களும், அதைத் தொடரந்து பெறப்படும் தரவுகளும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுமாகும்.

மார்க்கத்தைமிகவும்இறுக்கமாகக்கடைப்பிடிக்கும்இஸ்லாமிய சமூகத்தில் போதைவஸ்து புழக்கம் தொடர்ச்சியான எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டி நிற்கின்றமைமிகவும்வேதனையளிப்பதுடன்,“திருடராய்ப்பார்த்துதிருந்தாவிட்டால்திருட்டைஒழிக்கமுடியாது”என்றகருத்தைவலியுறுத்திநிற்கின்றது.போதைப்பொருள் பாவனை தொடர்பில் முறையான தேசியக் கொள்கை இல்லாமையும்அரசியல்வாதிகளின்தலையீடும்சட்ட அமுலாக்கலுக்கு பாரிய சவாலாகவும் பின்னடைவாகவும் அமைந்துள்ளது.

இங்கு நாம் மிகமுக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில், இலங்கையில் மதுவுக்கு அடிமையானவர்களை விடவும் கஞ்சா மற்றும் புகைத்தல் பொருட்களுக்கு அடிமையானவர்களே மிக அதிகம்.எனவேமதுவுக்குஎதிராகமக்கள்மத்தியில்ஏற்படுத்தப்படும்விழிப்புணர்வுநடவடிக்கைகளுக்குஈடானஅல்லதுஅதைவிடவும்மிகஅதிகமானவிழிப்புணர்வுசெயற்பாடுகளைபோதைவஸ்துக்களுக்கும்புகைத்தல்பொருட்களுக்கும்எதிராகமேற்கொள்ளவேண்டியகட்டாயத்தில்நாம்இருக்கின்றோம்.

 

“மகிந்தவின் மதுவிற்கு முற்றுப்புள்ளி”

மகிந்த அரசு 2005 இல் மகிந்த சிந்தனை ஊடாக “மதுவிற்கு முற்றுப்புள்ளி” (மதட்ட தித்த) என்னும் அரசியல் கவர்ச்சிகரமான மதுபானத் தடைக் கொள்கையை முன்வைத்திருந்தது. அதன் பிரகாரம்:

  1. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து முற்றாக விடுவிப்பதன் ஊடாக சமூகத்தில் போதைப்பொருட்களுக்கான கேள்வியைப் படிப்படியாக குறைத்தல்
  2. போதைப்பொருட்களுக்கான வழங்கலைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு வினைத்திறனுள்ள விதத்தில் சட்டத்தை அமுலாக்கல்
  3. போதைப்பொருட்களின் புழக்கத்தை கணிசமான அளவு குறைத்தல்

போன்ற இலக்குகளை 2015 இல் அடைவதனூடாக 2020 ஆம் ஆண்டு போதையற்ற இலங்கையை உருவாக்குவதாக மகிந்த அரசு முழங்கியது. ஆனாலும் பௌதீக ரீதியாக, அரசியல் செல்வாக்கினால், மதுபானச் சில்லறை விற்பனை நிலையங்களை மேன்மேலும் ஆரம்பிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களை அதிகளவில் வழங்கியதன் மூலம், குறிப்பாக யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் உல்லாசப்பயணத் துறையின் பெயரால் ஏராளமான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், மதுபானத்தின் புழக்கத்தையும் பாவனையையும் நாட்டில் அதிகரித்திருந்தது. இதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக மார்தட்டிக்கொள்ளும் மகிந்த அரசு, போதைப்பொருட்களுக்கு எதிரான யுத்தத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்டது என்பது நிதர்சனமான உண்மை.

இலங்கைத் தீவின் நாளாந்த போதைப்பொருள் பாவனையின் பெறுமதி ஏறத்தாள 450 மில்லியன் ரூபாய்களாகும் (மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தம் ஏறத்தாள 10 மில்லியன் ரூபாய்களாகும்). இது தவிரவும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளுக்கான மருத்துவக் கவனிப்பு, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள், போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் சிறைவாசம் பெற்ற கைதிகளை (மொத்த கைதிகளில் 40%) பராமரித்தல் போன்ற பலதரப்பட்ட செயற்பாடுகளுக்காகவும் அரசும் அரசு சாரா நிறுவனங்களும் நாளாந்தம் பல நூறு மில்லியன் ரூபாய்களை செலவளித்து வருகின்றன. இதனூடாக இந்த பிரச்சனை நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வளவு தூரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது என்பதை யூகித்துக் கொள்ள முடியும். இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவின்படி குறைந்த கல்வியறிவு, சிறுபராயத்து நடத்தைச் சீர்கேடுகள், பொருளாதாரப் பின்னடைவு போன்ற காரணிகள் போதைப்பொருள் பாவனைக்கு வித்திடுகின்றன. பெரும்பாலும் விடலைப்பருவத்திலேயே ஆரம்பிக்கின்ற இப்பழக்கம் படிப்படியாக நாளடைவில் தொடர்பழக்கமாகி இறுதியில் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இவர்களில் மூன்றிலொரு பங்கினருக்கு போதைப்பொருள் பாவனையின் குடும்ப பின்னணியும் காணப்படுகின்றது. புகைத்தல் மற்றும் மதுபாவனை பழக்கம் இவர்களில் பரந்துபட்ட அளவில் காணப்படுவதுடன் சட்டவிரோத போதைப்பொருள் வரிசையில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பாவனை மிக அதிகளவில் உள்ளதுடன் நான்கில் மூன்று பங்கினர் பல்ரக போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் உள்ளனர். மேலும் நேரடியாக இரத்தத்தில் போதைப்பொருளை ஏற்றுபவர்களினதும் பாலியல் துர்நடத்தையில் ஈடுபடும் ஆபத்தும் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.எல்லாவற்றுக்கும் மேலாக, போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்பு இல்லாத போதும் அந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதேயளவில் பேணப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

“மைத்திரியின் போதையற்ற தேசம்”

மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சி அரசு ஆட்சிபீடம் ஏறிய போது வெளிப்படுத்திய நல்லெண்ணக் கருத்துக்களில் ஒன்று தான் “போதையற்ற தேசம்” உருவாக்குதல். இது இலங்கை வாழ் அனைத்து மக்களாலும் சிறந்த கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதில் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் உட்பட்ட யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் அவரது நேரடிக்கண்காணிப்பின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விசேட செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேன்மைதகு ஜனாதிபதி அவர்களின் “கனிவான ஆட்சி – உறுதியான நாடு” என்ற கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில், போதையற்ற இலங்கைத் தேசத்தை உருவாக்குவதன் மூலம், சமூக பொருளாதார கலாசார ரீதியான அபிவிருத்திக்கான பின்னணியைத் தயார் செய்தல் தான் இந்த செயலணியின் தொலைநோக்காகும். மேலும், புகையிலை, போதைப்பொருட்கள் உட்பட்ட மதுபான பாவனையை படிப்படியாக இல்லாதொழித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதன் மூலம் அனைத்து இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து, நலன்களை மேம்படுத்தி, உற்பத்தியை அதிகரித்து, வறுமையை ஒழிக்க வினைத்திறனுடன் செயற்படுதல் தான் இந்த செயலணியின் பணிக்கூற்றாகும். இந்த செயற்திட்டமானது நாட்டின் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சி அரசின் கருத்துப்படி, வரவு செலவுத் திட்டமானது கலால் வரி வருமானம் இன்றி செயற்படுத்த முடியாது என்கின்ற அபிப்பிராயம் நாட்டை அபாயத்தில் இட்டுள்ளது. ஆகவே 2020 ஆம் ஆண்டளவில் திறைசேரி வருமானத்தை கலால் வரி வருமானம் இன்றி அதிகரிப்பது தான் தமது இலக்கு என்றும் அதற்கு தாம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் அது நல்லாட்சி அரசின் கடமை என்றும் மேன்மைதகு ஜனாதிபதி ஆணித்தரமாக கூறியுள்ளார். அண்மையில்அந்தக் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில்ஜனாதிபதி அவர்கள் மற்றுமொரு தகவலை தெரிவித்திருந்தார். மதுபானம் மற்றும் சிகரட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென திறைசேரியினால் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதென்றும், அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தாலும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடாகவே தான் இதனைக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் மேடைப் பேச்சுகளாக அமைந்திருக்கும் இந்தக் கருத்துக்களின் நடைமுறைச்சாத்தியங்களை சற்று ஆராய்ந்தால் நமக்கு சில உண்மைகள் புலப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சி அரசின் 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை ஆராய்கின்ற போது கலால் வரிச்சேர்ப்பின் மூலம் திறைசேரி ஏறத்தாள 575 பில்லியன் ரூபாய்களை வரி வருமானமாக எதிர்பார்த்துள்ளது. இது எதிர்பார்க்கப்படும் மொத்த வரி வருமதியில் 28% ஆகும். இதில் மதுபானம் மூலம் ஏறத்தாள 180 பில்லியன் ரூபாய்களை திறைசேரி வரி வருமானமாக எதிர்பார்த்துள்ளது (மொத்த வரி வருமதியில் 9%). 2015 இல் கலால் வரிச்சேர்ப்பின் மூலமான இவ்வருமதி 498 பில்லியன் ரூபாய்களாகவும் (33%), 2016 இல் 444 பில்லியன் ரூபாய்களாகவும் (27%) இவ்வருமதி இருந்துள்ளது. திறைசேரியின் வரி வருமானத்தில் கலால் வரியிறுப்பு வருமதி கணிசமான பங்கை வகிப்பதுடன் அதன் வகிபாகம் அதிகரித்து செல்லுகின்ற நிலையை இத்தரவுகள் தெளிவாகக் காட்டி நிற்கின்றது.எனவே 2020 ஆம் ஆண்டளவில் திறைசேரி வருமானத்தை கலால் வரி வருமானம் இன்றி அதிகரிப்பது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும். நல்லாட்சி அரசின் இந்தக் கொள்கை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் அதன் நடைமுறைச் சாத்தியம் ஒரு கண்கட்டு வித்தையாகவே தென்படுகிறது.

 

“தேசிய மதுக் கொள்கை”

இலங்கை சட்டரீதியான மது வருவாயினைத் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருந்த போதிலும் இலங்கைக்கு எப்போதும் ஒரு விரிவான மதுக்கொள்கை காணப்படவில்லை.மதுக்கொள்கையானது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் பல பிரச்சனைகளைக் கொண்ட சிக்கலான ஒரு கொள்கைப் பரப்பாகும்.

இலங்கையின்மதுப்பாவனையைப்பொறுத்தவரை 2014 இல்மேற்கொள்ளப்பட்டஆய்வின்படி 39.6% ஆண்களும் 2.4% பெண்களும்மதுப்பாவனையாளர்களாகும். இது 2008 இல்முறையே 26% ஆகவும் 1.2% ஆகவும்காணப்பட்டது. மேலும்ஒருவர்கிழமைக்குசராசரியாகதலா 23.5 அலகுகள்மதுவைப்பாவிப்பதுடன்ஆகக்கூடியளவில்பயன்படுத்தப்படுவதுபியர் (76.9%), சாராயம் (51.5%),வைன் (25.8%) மற்றும்கசிப்பு (22.2%) என்பவையாகும்.இலங்கையில்ஆபத்தானகுடிப்பழக்கமானது 5.2% ஆண்களிலும் 0.02% பெண்களிலும்காணப்படுகிறது. தொழில்செய்கின்ற, பத்தாம்தரத்துக்குட்பட்டகல்விமட்டம்கொண்ட, புகைத்தல்பழக்கமுடைய, நகரவாசிஆண்களே மதுப்பாவனைக்குஉட்படவாய்ப்புகள்அதிகம்இருப்பதாகவும்கண்டறியப்பட்டுள்ளது.

1998 இல் இலங்கை தேசிய மதுக்கொள்கை ஒன்றை உருவாக்க முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. ஏனெனில் அதில் மது சம்பந்தமான விளம்பரங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இடம்பெறுவது மாத்திரமே தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மறுபுறத்தில் மதுபானக் குடிவகைகளின் இறக்குமதி தாராள மயமாக்கப்பட்டது. அதே போன்று,மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு அருகில் மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டமை இன ஒழுக்க மற்றும் மத விழுமியங்களாக மதிக்கப்பட்ட போதிலும், மதுபானப் பாவனைப் போக்கில் எந்தவித பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் முடிவுகள் மூலம் அறியப்பட்ட கசப்பான உண்மை. மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் மதுபோதையின் காரணமான வன்முறை போன்ற குற்றங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் காணப்பட்ட போதிலும் அவை அதீத கவனம் செலுத்தப்பட வேண்டிய பாரதூரமான பிரச்சனைகளாகவே இன்னும் உள்ளன.

அண்மைக்காலமாக, மதுக்கொள்கை தொடர்பான விஞ்ஞான ஆய்வுகளில் அதிக ஆர்வம் வளர்ந்து வருவதைக் காணலாம். ஏனெனில் பிழையான மற்றும் செயற்றிறனற்ற கொள்கைகளின் கெட்ட பாதிப்புக்களுடன் போராடுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் நாட்டில் மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு என்பவற்றின் தற்போதைய நிலைமையின் வெளிச்சத்தில் புதிய கொள்கைத் தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.

மதுபான உற்பத்திகளில் உளவியல் பண்புகள் காணப்படுவது மட்டுமன்றி அவை பொருட்களாகவும் கருதப்படுகின்றன. மதுபானங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அவற்றுடன் தொடர்புபட்ட கைத்தொழிற்றுறைகளில் அதிகமானோருக்குத் தொழில்வாய்ப்பினை வழங்குவதன் மூலமும், மதுபான உற்பத்திக் கம்பனிகளுக்கு வருமானத்தையும், அரசுக்கு வரிவருமானத்தையும் வழங்குவதன் மூலமும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்தப் பொருளாதார மற்றும் நிதி நலன்கள் பெரும்பாலும் பொதுச்சுகாதார முயற்சிகளுக்குத் தடைகளாக காணப்படும் கொள்கைகளின் கூறுகளாகும். இலங்கைச் சூழலில் பொதுநலன் அங்கீகாரம் காரணமாக இந்தப் பொருளாதார மற்றும் நிதி நலன்களுக்கு எதிராகப் போராடுவதற்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. நாட்டின் வருமானத்துக்குப் பங்களிப்புச் செய்யும் துறை தொடர்பில் கொள்கைப் பிரகடனம் செய்யும் போது கொள்கை வகுப்போர் மற்றும் பொதுமக்களால் சரியான முறையில் முகங்கொடுக்க வேண்டிய ஏராளமான முரண்பாடுகளும் சவால்களும் எழுகின்றன. இது இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நடைமுறைச் சாத்தியமான மதுக்கொள்கை மீளாய்வின் தேவையை வலியுறுத்துகின்றது.

வடகிழக்கு யுத்த காலத்திலும் கூட இலங்கையில் மதுபான உற்பத்தியானது ஒரு இலாபகரமான தொழிற்றுறையாகக் காணப்பட்டதுடன் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானத்தின் அளவும் பாவனையும் அதிகரித்த போக்கிலேயே காணப்பட்டது.யுத்த முடிவின் பின்பு மதுபானக் கைத்தொழிலும் அதுபோன்றே மதுபானப் பாவனையும் புதியதொரு எல்லையைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 வருடங்களில்நாட்டில் மென்மதுபானங்களின் உற்பத்தி வருடத்துக்கு சராசரியாக 7.5% அதிகரிக்கும் அதேவேளை வன்மதுபான வகைகளின் உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 20% அதிகரித்துச் செல்லுகின்றது.

யுத்தத்துக்குபின்னரான 3 வருடகாலப்பகுதியில்நாட்டின்மென்மதுபானங்களின்பாவனைமிகஅதிகமாகஅதிகரித்து (வருடத்துக்குசராசரியாக 45%) தொடர்ச்சியாகவன்மதுபானவகைகளின்பாவனையைவிடஅதிகமாகவேகாணப்படுகிறது. இது உண்மையில் இலங்கையில் வன்மதுபான வகைகளின் பாவனையிலிருந்து மென்ரக மதுபான வகைகளின் பாவனைக்கு மக்களின் குடிப்பழக்கத்தை மாற்றுவதில் நாம் வெற்றிபெறக்கூடிய சூழலைக் காட்டுகின்றது.ஆனாலும், இதற்குசுற்றுலாத்துறையின்வளரச்சியும்உல்லாசப்பயணிகளின்மென்குடிவகைப்பழக்கமும்ஒருகாரணமாகஇருக்கலாம்.

உலகளாவிய ரீதியில் வரியியலானது மதுபானத் தொழிற்றுறை மற்றும் சந்தையை ஒழுங்குபடுத்தும் முதன்மையான முறைமையாகும். எனினும் இலங்கையில் வரியியல் கொள்கையானது மதுப்பாவனைக் கலாச்சாரத்தை மந்தப்படுத்தும் அல்லது சீர்படுத்தக்கூடிய செயற்றிறனுடையதாகக் காணப்படவில்லை. சனத்தொகை குறைந்த வீதத்தில் அதிகரிப்பதனால் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை பெருகுவதுடன் அவர்களுள் அதிகமானோர் மதுபானப் பாவனையாளர் குழாத்தினுள் நுழைகின்றனர். அத்துடன் அதிகமான கட்டுப்பாடுகளுடனான சட்டங்கள் நாட்டின் சட்டவிரோத மதுபானத் தொழிற்றுறைக்கு வலுச்சேர்க்கிறது.

இலங்கையின் மதுபான சந்தையில் 65% சட்டவிரோதமானது என்பது எம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். மேலும் சுயாதீன ஆய்வறிக்கைகளின்படி நாட்டிலே ஏறத்தாள 4000 சட்டபூர்வ மது விற்பனையாளர்களும் 200 000 இற்கும் மிக அதிகமான சட்டவிரோத மது விற்பனையாளர்களும் உள்ளனர். சட்டவிரோத மதுபானத் தொழிற்றுறையானது அதிகளவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சட்டரீதியாகவும் சட்டவிரோதமாகவும் மதுபானம் தயாரிப்பதற்கான மதுசாரம் (ஸ்பிரிட்) போன்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் சுங்கச் சட்டங்களை மீறிச்செயற்படுவது உறுதியாகியுள்ளது. அதே போன்று மதுத்தொழிற்றுறை மற்றும் சட்டத்தை செயற்படுத்துவதில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் உத்வேகமற்ற மென்போக்கினால் சட்டவிரோத மதுபானக் கலாச்சாரத்தை மாற்ற முடியாதுள்ளது.

காணப்படும் மதுவரிகளானவை ஏழைகள் அவர்களது வருமானத்தில் அதிகமான தொகையை வரியாகச் செலுத்துவதை வலியுறுத்தும் சுமையாகக் காணப்படுகிறது. இது அவர்கள் விலை குறைந்த, வெறியம் கூடிய, ஆபத்தான, சட்டவிரோத மதுபான வகைகளை நாடிச்செல்லும் நிலைக்கு வழிவகுக்கிறது. மேலும், வெறியம் கூடிய மதுபான வகைகளைப் பயன்படுத்துவதால் மதுவுக்கு அடிமையாகிக் குடிப்பழக்கத்தை மாற்ற முடியாத ஒரு நிலையும், மதுவினால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. இது தவிர ஆபத்தான சட்டவிரோத மதுபான வகைகளினால் மரணங்களும் சம்பவிக்கின்றன. மறுபுறத்தில் மதுபான வரியானது அரசாங்க வரி வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதனால், சட்டபூர்வ மதுபான வகைகளின் பாவனைக் குறைவானது அதன் விலை அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது. இந்தச் சூழலில் வரியியலானது மதுபானத்திலுள்ள வெறியத்தின் அளவுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் போது நுகர்வோருக்கு குறைந்த விலையில் குறைந்தளவு வெறியத்தினைக் கொண்ட மென்ரக மதுபானத்தினைத் தெரிவுசெய்ய வழிவகுப்பதுடன், உயர் அரச வருமான ஈட்டலை தொடருவதாகவும், குறைந்தளவு வெறியத்தினைக் கொண்ட மென்ரக மதுபானவகைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும் அமையும்.

மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் மென்ரக மதுபான வகைகளை உற்பத்தி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் வன்மதுபான வகைகளின் பாவனையிலிருந்து மென்ரக மதுபான வகைகளின் பாவனைக்கு மக்களின் குடிப்பழக்கத்தை மாற்றுவதில் வெற்றிகண்டுள்ளன. அதேபோன்ற தந்திரோபாயங்களை பிற்பற்றுவதனூடாக இலங்கையின் மதுபானப் பாவனைப் போக்கையும் மாற்ற முடியும் என்பது ஆய்வாளர்களின் ஆணித்தரமான கருத்தாகும். சட்டவிரோத மதுபானப் பாவனை மற்றும் தரங்குறைந்த ஆபத்தான மதுபானப் புழக்கம் போன்றவை அடையாளம் காணப்படவேண்டிய பிரச்சனைகளாகும். இந்நிலையில் மக்கள் ஆபத்தான சட்டவிரோத மதுபானங்களை நுகருவதிலிருந்து பாதுகாப்பதற்கான தந்திரோபாயங்களை தேடும் கடமையும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

இந்நிலையில் முழுமையான மதுஒழிப்பு அல்லது மதுத்தவிர்ப்பு என்ற அரசியல் கவர்ச்சிகரமான மேடைப்பேச்சானது கறிக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காயாகும். அதை விட மதுவினால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகளை இல்லாதொழிக்கும் யதார்த்தமானதும் நடைமுறைச் சாத்தியமுமான வெற்றியளிக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கிய திட்டங்களே நாட்டின் அவசியத்தேவையாக உள்ளது. எனவே, மதுபானத் தொழிற்றுறையிலுள்ள அக்கறையுள்ளோர், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சட்ட விரோத மதுபானத் தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், மிதமான மதுபானப் பாவனையாளர்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அலுவலர்கள், அரசாங்க அலுவலர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் மதப்பிரமுகர்களினது கருத்துக்களை விரிவாக மீளாய்வு செய்து ஒரு பகுத்தறிவுக் கொள்கைக் கட்டமைப்பை வகுப்பதோடு மாத்திரமன்றி அதனை செயற்றிறனாக அமுல்படுத்துவதும், மேற்பார்வை செய்வதும், செயற்படுத்துவதும் போதையற்ற தேசத்தை உருவாக்குவதற்கு வழிசமைக்கும்.

சத்தியமூர்த்தி மதனழகன், விசேட வைத்திய நிபுணர் ,  போதனாவைத்தியசாலை, மட்டக்களப்பு