நீதிமன்றக்கட்டளை கிழிப்பு- விளக்கமறியலில் வைக்கப்பட்ட பட்டதாரிகள் பிணையில் விடுதலை

கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக கடந்த மாதம் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் முற்றுகைப் போராட்டத்தின் போது நீதிமன்றக் கட்டளை கிழித்தெறியப்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பட்டதாரிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் கடந்த 23ம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னாந்த ஞானரத்ன தேரர் மற்றும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி. கிசாந்தன் உட்பட நால்வரின் வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி இரட்ணாயக்க முன்னிலையில் இடம்பெற்றது.
பட்டதாரிகள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.அ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், நுவான் வோபகே, ரி. கிறிசாந்தன் ஆகியோர் இன்றைய தினம் ஆஜராகியிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தமை உட்பட சட்டவிரோதமாக கூடியிருந்தார்கள், பொலிஸாரின் கடமையை நிறைவேற்றத் தடையாக இருந்தார்கள், பொது சமாதானத்திற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொண்டார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டை விளக்கிய சுமந்திரன் அவர்கள் நீதவான் நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் நீதிமன்றத்திற்கு உள்ளே நடைபெறுகின்ற அவமதிப்பு செயல் அல்லாமல் வெளியே நடைபெறுகின்ற அவமதிப்புக்களை விசாரிக்கும் நியாயாதிக்கம் இல்லை அது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளது என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு வழக்குத் தொடுனர்களான பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
எனினும் நீதவான் நீதிமன்ற .நியாயாதிக்கத்திற்கு உட்பட்டவைகளான ஏனைய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்பத்திரத்தைத் தயாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் சம்பவம் நடைபெற்ற அன்றே குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்திரிகைகள் மூலம் மன்னிப்புக் கோரியிருந்தார்கள் என்றும், நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தவுடனே தாமதமின்றி மன்றிற்கு முன்னிலைப்பட்டார்கள் என்றும், தற்போதும் எந்தவித நிபந்தனையுமற்ற மன்னிப்பைக் கோருகின்றார்கள் என்றும் மன்றுக்குத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இந்த அடிப்படைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு மன்றுக்கு எடுத்துரைத்தார்.
பொலிஸார் இதற்கு எதிர்வாதமாக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொதுமக்கள் கலவரப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும், இது மிகப்பெரிய சமாதானக் குலைவுக்கு வழிவகுக்கும் என்றும் எனவே பிணைக்கோரிக்கையை தாம் எதிர்ப்பதாகவும் வாதிட்டனர்.
இது தொடர்பான சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதவான் இந்தப் பட்டதாரிகளான குற்றம் சாட்டப்பட்டவர்கள், படித்தவர்கள், சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது எனவும், நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும், சட்டத்தில் பிழைகள் இருப்பதாக கருதினால் உரிய முறையில் அவற்றைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே அல்லாமல் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து இரண்டு லெட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதாகவும் எதிர்வரும் ஐப்பசி மாதம் 02ம் திகதி மன்றில் முன்னிலைப்பட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார்.
இதன்; போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகி கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களும் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.