ஏறாவூர்பற்றில் முனைப்பின் இரு வேலைத்திட்டங்கள்

மட்டக்களப்பு செங்கலடிப்பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமுலை, களுவங்கேணி பிரதேசங்களில் சனிக்கிழமை முனைப்பினால் இரு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக முனைப்பின் ஸ்ரீலங்கா தலைவர் மாணிக்கபோடி சசிகுமார் தெரிவித்தார்..
வந்தாறுமுலைகிராமத்தில் குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண் உட்பட  வன்செயலில் தனது கணவனை இழந்து வாழும் தனது மகளையும் குழந்தைகளையும் பாராமரிக்கும் நோக்கில் சுயதொழில் முயற்சியாக சிற்றுண்டிச்சாலைக்கான பொருட்களும் அதற்கான முதலீட்டுக்கான ஊக்குவிப்புத்தொகையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உதவியினப்பெற்ற திருமதி பி.தவலெட்சுமி கருத்துத்தெரிவிக்கையில் குறிப்பிட்ட உதவியின் ஊடாக தனது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவேன். அத்துடன் எனது மகளையும் மகளின் பிள்ளைகளைகளையும் இக்கடையின் ஊடாக பராமரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அடுத்து கிழக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற சைக்கிள் ஓட்ப்போட்டியில் 2ம் இடத்தினைப்பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ள களுவண்கேணி கிராமத்தைச்சேர்ந்த வீரர்  இ.பிறேம்நாத் என்பவருக்கு தேசிய போட்டிக்கு செல்வதற்கான சீருடை, பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்உதவி குறித்து வீரர் பிறேம்நாத் கருத்துத்தெரிவிக்கையில் தான் மாகாணமட்டப்போட்டியில் சீருடை இன்றி செருப்புடனே போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றேன். தேசியபோட்டிக்கு செல்வதற்கு சீருடை பாதணிகளை கொள்வனவு செய்வதற்கு வசதியின்மை காரணமாக பலபேரிடம் சென்று உதவிகேட்டேன் யாரும் உதவ முன்வரவில்லை என் நிலையை அறிந்து உதவி செய்த முனைப்பு நிறுவனத்துக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன் தேசிய போட்டியில் கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் முனைப்பின் செயலாளர் இ.குகநாதன், ஆலோசகர் கு.அருணாசலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.