குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை

“திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை. விகாரையொன்று இருந்தமைக்கான அடையாளமே உள்ளது” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மார்ச் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றில்  பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவலிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கும் அங்கு புராதன கோவிலொன்று இருந்ததற்கும் எவ்வித அடையாளங்களும் இல்லை. 

குறித்த பகுதியில், புராதன விகாரை இருந்ததற்கான அடையாளம் உள்ளது. எனவேதான், அங்கு புதிய கோவிலொன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச்சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன தொல்பொருள் திணைக்களத்தால் சிதைக்கப்படவில்லை.

எனினும், அப்பகுதிகளில் வாழும் சிலரால், பௌத்த மதத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் இடங்களையும், புராதனச் சின்னங்களையும் அழிக்கும் அச்சுறுத்தல் இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருட்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்கின்றபோது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்த தொல்பொருட்கள் தொடர்பிலான அறிவார்ந்த அதிகாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் இணைந்துசெயற்பட்டுவருகின்றனர்.

கன்னியா வெந்நீரூற்று கிணறு, அங்குள்ள புராதன விவகாரை உள்ளிட்டவை தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதை பிரதேச சபையிடம் ஒப்படைப்பதற்கு சட்டரீதியாக இடமில்லை” என்றார்.