கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஹர்த்தால் ,கடையடைப்பு மற்றும் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் போலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட  உம்மது முகமது மக்கள் ஓன்றியத்தின் தலைவருக்கு நிபந்தனையின் பேரில்  நீதிமன்றம்  பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.

மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற  நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில்  குறித்த  சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது .

  புதன்கிழமை அந்த பிரதேசத்தில் கடையடைப்பு , ஹர்த்தால் மற்றும் பேரணிக்கு ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தாக உம்மது முகமது மக்கள் ஓன்றியத்தின் தலைவரான  அப்துல் ரகீம் முகமது சஃதி  என்பவருக்கு எதிராக  காத்தான்குடி  பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான்   நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பொலிஸாரால் நீதிமன்றத்தில்  முன் வைக்கப்பட்ட அறிக்கையில்  காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள், வர்த்தக சங்கம் என்பன இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  குறித்த நபரால் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு  அதனை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பேரணியானது அந்த  பிரதேசத்தில் நடைபெறுமானால்   பொது மக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும்  அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணத்தை முன் வைத்து அதற்கான  தடை உத்தரவை வழங்குமாறு நீதிமன்றத்தை  கோரினர்.
 ஹர்த்தால் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை  மறுத்த சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி  அமைதி பேரணியொன்றை நடத்தி ஜனாதிபதிக்கு மகஜரொன்றை அனுப்புவதற்கே அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அது தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தை மன்றில்  சமர்பித்தார்.
எதிர்காலத்தில்  இவ்வாறான ஹர்த்தால் அல்லது பேரணி ஏற்பாடு செய்யப்பட மாட்டாது  என சந்தேக நபர் சார்பாக  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு  சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா  பொது மக்களின் அமைதிக்கோ  அல்லது பாதுகாப்புக்கோ , அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேரணிகளோ அல்லது ஹர்த்தாலே அனுஸ்டிக்க கூடாது என கட்டளையிட்டு சந்தேக நபரை 20 ஆயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டு அடுத்த மாதம் 7ம் திகதி வரை விசாரனையை ஒத்தி வைத்தார்.   .