கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை பிற்போடுக

கிழக்கு மாகாண பாடசாலைகளின் சுமுகமான செயற்பாட்டை சீர்குலைத்துள்ள ஆசிரியர்களுக்கான 2017 வருடாந்த இடமாற்றத்தை உடனடியாக பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வித்துறைசார் தொழிற்சங்கங்கள் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக மேற்படி சங்கங்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எந்தவொரு இடமாற்றமும் வருட ஆரம்பத்தில் இடம்பெறுவது வழமையாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றமானது வருடாந்த இடமாற்றம் என்ற போர்வையில் வருட இடைநடுவில் கிழக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான தேசியக்கொள்கைக்கு முற்றிலும் முரணான இவ்விடமாற்றங்களால் பாடசாலைகளில் வழமையான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை அதிபர்களின் நிருவாக நடவடிக்கைகளும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளது.

க.பொ.த சாதாரண, ஐந்தாம் தர புலமைப்பரிசில் வகுப்புக்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவ்வகுப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இறுதியாக வெளியாகிய க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கையொன்று வகுக்கப்படவில்லை. கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன் பகிரங்கமாக ஏனைய மாகாணங்கள் விண்ணப்பம் கோருவது போன்று கோரப்படவில்லை.

இவ்வாறு பல்வேறு குறைபாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டு முறையான கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றம் இடம்பெற வேண்டுமென மேற்படி சங்கங்கள் கோரியுள்ளன.