பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்..
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில்   இன்றைய தினம் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்துடன் சென்று மணலை ஏற்றிவந்து வீட்டில் பறித்த பின்னர், வீதியில் இடைமறித்த வனவள திணைக்கள அதிகாரிகள், மீளவும் உழவு இயந்திரத்தில் மணலை ஏற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
வனவளத் திணைக்கள அதிகாரிகளின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட பிரதேச மக்கள் அவர்களின் அடாவடியான நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தினர். இதன்போது ஆத்திரமடைந்த வன வளத் திணைக்கள் அதிகாரியொருவர் அங்கிருந்த பெண்ணொருவரை தள்ளியுள்ளார்.
இதனையடுத்து வனவளத்திணைக்கள அதிகாரிகளுக்கும் – பிரதேச மக்களுக்கும் கடும்முறுகல் ஏற்பட்டது. இதனால் சில மணி நேரம் அங்கு பதற்றமும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, முல்லைத்தீவு முள்ளியவலை பொலிஷ் அதிகாரியை சம்பவ இடத்திற்கு வரவழைத்த வனவளத் திணைக்கள அதிகாரிகள் கட்டாயப்படுத்தி மணலை ஏற்றிவந்த உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
ஒட்டிசுட்டான் பொலிஸாரே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில் வளவளத் திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளைப் பொலிஸாரை வரவழைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாகவே வனவளத் திணைக்கள அதிகாரிகள் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வசந்தபுரம் செல்கின்ற வீதியிலுள்ள பேராற்றில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் சட்டவிரோதமாக மணல் அள்ளும் இயந்திரத்தின் மூலம், நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாரிய குழியொன்றை தோண்டி அங்கிருந்து, தண்ணீரை எடுக்க முயற்சித்தனர்.
ஆற்றினுள் பாரிய குழியொன்றை தோண்டி பல இலட்சம் பெறுமதியான மணல் இரண்டு புறமும் குவிக்கப்பட்டிருந்ததை கண்ட பிரதேச மக்கள் இது குறித்து ஒட்டிசுட்டான் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து வன வளத் திணைக்களத்தினரின் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் அனுமதிப் பத்திரத்துடன் சென்று மணலை அள்ளிவந்த உழவு இயந்திரத்தின் சாரதியையும் உழவு இயந்திரத்தையும் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
குறித்த உழவு இயந்திரத்தின் சாரதிக்கு அனுமதிப் பத்திரம் இல்லை என்று குற்றம்சாட்டியே தாங்கள் சாரதியை கைதுசெய்ததுடன் உழவு இயந்திரத்தையும் கையகப்படுத்தியதாக வன வள திணைக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாததை காரணம் காட்டி அனுமதிப் பத்திரத்துடன் ஏற்றிவந்த மணலை மீண்டும் ஏற்றிச் செல்வதற்கோ அல்லது சாரதியை கைதுசெய்வதற்கோ வன வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்றும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்