1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நிலவிவந்த யுத்தம் காரணமாக தமிழ் சமூகத்தினை சார்ந்தவர்களுக்கு கல்வியினை பெற்றுக்கொள்வதில் பல்வேறுபட்ட சிரமங்கள்

வெறுமெனே எப்போதாவது ஒரு முறை கௌரவிப்பு விழாவையும் பரிசளிப்பு நிகழ்வுகளையும் நடாத்துவதனூடாக மாத்திரம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியினை உயர்வடையச் செய்ய முடியாது. மாறாக மாணவர்களின் கல்வி தொடர்பாக தொடர்ச்சியான ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியாலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்..

பூநொச்சிமுனை அல-இக்றா பாடசாலையில் 2015ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கப்படும் ஒரு வருடத்திற்கான புலமைப்பரிசில் உதவித்திட்டத்தின் மூன்றாம் கட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…
ஆனால் அத்தகைய ஊக்குவிப்புத் திட்டங்கள் எதுவும் முறையாக முன்னெடுக்கப்படாத காரணத்தினாலேயே இன்று எமது சமூகம் கல்வியில் பாரிய பின்னடைவினை எதிர் கொண்டுள்ளது.
குறிப்பாக 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நிலவிவந்த யுத்தம் காரணமாக தமிழ் சமூகத்தினை சார்ந்தவர்களுக்கு கல்வியினை பெற்றுக்கொள்வதில் பல்வேறுபட்ட சிரமங்கள் காணப்பட்டதோடு எமது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வியினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்பட்டது.
ஆனால் துரதிஸ்டவசமாக அத்தகைய காலங்களில் கல்வி கற்ற எமது மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தொடர்ச்சியான ஊக்குவிப்புக்கள் எதனையும் வழங்காத காரணத்தினால் இன்று நாங்கள் இத்தகைய கல்வி தொடர்பான பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், எனவே பின்தங்கிய பிரதேசத்திலுள்ள மாணவர்களை கல்வி தொடர்பாக ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் கல்வியில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே  இன்று நாங்கள் இந்த உதவித்திட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து விதமான பௌதீக மற்றும் ஏனைய வளங்களையும் தொடர்ச்சியாக பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.
எனவே மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள வளங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதோடு தமது எதிர்காலத்தினை சிறந்த முறையில் அமைத்துக்கொள்வதற்காக பல்வேறு அர்பணிப்புகளையும் மேற்கொள்ள தயாராக வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.