உரிமைகளை பெற்றால்தான் உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்

தமிழ் மக்கள் இந்த நாட்டிலே தமக்கான உரிமையை பெற்றால்தான், அந்த உரிமையை பெறுவதற்காக உயிர்களை இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும். அவ்வுரிமையை பெறுவதற்காக அரசியல் ரீதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு போராடிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிட்டார்.

காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றுப் போட்டிக்கு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களுக்கான பலம் பொருந்திய கட்சியாகவும், அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் கட்சியாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இக்கட்சியை தொடர்ந்தும் தமிழ்மக்கள் பலப்படுத்த வேண்டும். அதன் மூலமாக கிழக்கு மாகாணத்திலே முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும். அபிவிருத்தி செய்யப்படாத பகுதியிலே அபிவிருத்திகளையும் செய்ய முடியும். கடந்த காலங்களிலே தமது உரிமைகளுக்காக பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என பல துறைகளை தமிழ் மக்கள் இழந்திருக்கின்றனர். இன்னும் பலர் தங்களது உயிர்களை மாய்த்துள்ளனர். இறந்தவர்களின் ஆத்மாசாந்தியடைவதென்றால் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக நாம் அரசியல் ரீதியாக போராடி வருகின்றோம்..

கிழக்கு மாகாணசபையின் ஆயூட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது. மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டு, நீண்ட காலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியிலே அமர்ந்திருந்தது. இதனால் பல அபிவிருத்திகளை தமிழ் பகுதியிலேயே செய்ய முடிதாய நிலை ஏற்பட்டது. புதிய அரசொன்றினை 2015ம் ஆண்டு இந்தநாட்டிலே நிலைநிறுத்த செய்தமையினால் இரண்டு அமைச்சு பதவிகளையும், பிரதி தவிசளார் பதவியொன்றினையும் பெற்று பங்காளர்கட்சியாக மாறினோம். என்றார்.