எட்டிய மட்டும் பாய்வது எவுகணையாக இருக்க, எட்டாத தூரம் எல்லாம் பட்டுருவிப் பாயும் எழுது கோல்.

எட்டிய மட்டும் பாய்வது எவுகணையாக இருக்க எட்டாத தூரம் எல்லாம் பட்டுருவிப் பாயும் எழுது கோல் சுமந்து நம்முன்னோர்களினால் எழுதி வைக்கப்பட்ட தென்மோடி நாட்டுக்கூத்தான அல்லி நாடகத்தினை கலை பொதிந்த மகிழடித்தீவு மாந்தர்களும் நுகர்ந்து அனுபவிக்க வேண்டும். என்பதற்காக ஆரம்ப நாட்களிலே துடிப்புமிகு கலைஞர் தம்பிமுத்து விதானையாரால் உயிர்ப்பு ஊட்டி ஆடப்பட்டதாக எமது கிராமத்து முதியவர்களினால் அறிய கிடைக்கிறது. என அல்லி நாடக ஒருங்கிணைப்பு தலைவர் மகேஸ்வரலிங்கம் நக்கீரன் தெரிவித்தார்..


அண்மையில் மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற, அல்லி நாடகம் தென்மோடிக் கூத்து அரங்கேற்ற விழாவில் தலைமையுரை ஆற்றும் போது இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தலைமையுரையாற்றுகையில்,
கூத்து துர்வலரும் சிவபதடைந்தருமான பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும், எமது கலைஞர்களினால் இக்கூத்தினை 1965ஆம் ஆண்டளவில் ஆடி அரங்கேற்றம் செய்துள்ளமை பெருமையே.
கூத்து குறித்த ஆண்டில் ஆடி அரங்கேற்றம் செய்யப்பட்டமைக்கு சான்றாக இன்று எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கூத்தின் பங்குதாரர்களான வேலாட்சி அர்ச்சுணர், கந்தப்பர் வல்லிபுரம், செம்பாப்போடி சின்னத்தம்பி, வைரமுத்து கதிராமப்போடி, தம்பிமுத்து இராசநாயகம், சின்னத்தம்பி கதிராமப்போடி, வேலாட்சி வல்லிபுரம் ஆகியோரை குறித்துரைக்க முடியும்.
இவ்வாறான கூத்து கலைஞர்களினால் அவர்களது கூத்து படைப்புக்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வற்றுக்கூடாய் அவர்களது கலை, ஆற்றல்களும் வல்லமைகளும் அவர்கள் அக்கலை மீது கொண்டிருந்த பேராவலும், அவற்றிக்கு அவர்கள் வழங்கிய பேராதரவும் எம்முடன் ஒப்பு நோக்கின் அவர்களதே மலையளவாம். இருந்தும் அவர்களது சந்ததி சுவடுகளிலே தடம் பதித்து வரும் நாங்கள் எமது எதிர்கால சந்ததிக்காய் அவர்கள் விட்டு சென்ற முதுசங்களை எமது இளம் தலைமுறையினருக்கு கைமாறுவதற்காக நாங்கள் கடந்த 15மாதங்களாக எடுத்துக்கொண்ட பகிரத பிரயத்தனத்தின் விளைவே இன்றைய அரங்கேற்றமாக அமைந்திருக்கின்றது.
15மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஆரம்பித்திருப்பினும் தொடர்ச்சியாக 15மாதங்கள் கூத்தாடவில்லை. மூன்று, நான்கு களரி ஆடியதும் எங்கள் சக கூத்தாடிகள் வேறு மாவட்டத்திற்கு தொழில்நிமிர்த்தம் சென்று விடுவர். அவர்கள் திரும்பி ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழிந்ததன் பின் மீண்டும் கூத்தாட தொடங்குவோம். இவ்வாறு பல தடவைகள் நடைபெற்றது. மொத்தமாக 38களரிகள் ஆடியே இக்கூத்து அரங்கேற்றம் செய்யப்படுகின்றது. அன்றை பொருளாதார சூழ்மைகள் போல் இன்றைய பொருளாதார சூழ்மைகள் மாற்றமடைந்திருப்பதினாலும் பெரிய தொழில் துறையாக நாள் கூலி தொழில் வலிமை பெற்றதினால் கூத்தர்களில் பலர் தொழில் தேடி காத்தான்குடிக்கு பயணிக்கலாயிற்று. இதுவும் கூத்து நீண்ட காலம் செல்ல காரணமாயிற்று.
1965ஆம் ஆண்டு எமது கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட அல்லி நாடகத்தின் உந்து விசையாகவும், உதவி அண்ணாவியாராகவும் கூத்து வழிகாட்டியாகவும் இருந்து செயற்பட்ட அதே கலாபூசணம் வேலாட்சி வல்லிபுரம் அண்ணாவியார் எமது இக்கூத்தின் அண்ணாவியாராகவும் கிடைக்கப்பெற்றுள்ளமை சிறப்பாகும். என்றார்.