மட்டு. போதனா வைத்தியசாலையில் அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன

மட்டு. போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களின் தலைமையிலான அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன என்று விசேட வைத்திய கலாநிதி ச. மதனழகன் தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் நிலவும் இழுபறி நிலையைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை 22.05.2017 காலை 8.00 மணியிலிருந்து 24 மணித்தியாலத்துக்கு அடையாள வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவைகளின் நிலைபற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மயக்க மருந்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை வைத்திய நிபுணரும், விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்தின் செயலாளருமான விசேட வைத்திய கலாநிதி ச. மதனழகன் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த மருத்துவச் சேவையிலிருக்கின்ற நாங்கள் மனிதாபிமானத்தை இழந்து வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்த முடியாது என்று தெரிவித்ததுடன் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணிப்பகிஷ்கரிப்பு செய்தது கிடையாது என்றும் தெரிவித்தார்.
மேலும்அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களை தமது கல்வி நடவடிக்கைகளை தொடர வருமாறு பகிரங்க அழைப்பு ஒன்றையும் விடுத்தார்.
அது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து அரச மருத்துவபீட மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளில் இருந்து கடந்த பல மாதங்களாக விலகியுள்ளனர். இதனால் இவர்களது கல்வி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் ஏனைய தொழில் சங்கங்களுடன் இணைந்து இவர்களும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டஙகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களின் இருண்ட யுகங்களினால் மருத்துவப் படிப்பு சில சந்தர்ப்பங்களில் பல வருடங்களாக இழுபட்ட நிலையில் குறிப்பிட்ட அந்தந்த வருடப்பிரிவுகளில் பட்டம்பெற்று வைத்தியர்களாக வெளியேறியவர்களுக்கு மாத்திரமே அதன் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் இந்த மாணவர்கள் கல்வி கற்பதற்காகவே, தம்மை முழுமையாக அர்ப்பணித்திருக்கும் இவர்களின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும், இது பாரிய ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கின்ற விடயமாகும். அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களிலிருந்து தெரிவான மருத்துவ மாணவர்கள் தமது குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கடப்பாடு இருந்தும் அதைப்பற்றி சற்றும் சிந்திக்காமல் செயற்படுகின்ற விதமானது, எதிர்காலத்தில் இவர்கள் எவ்வாறு மக்களைப் பற்றி சிந்திக்கப் போகிறார்கள் என்ற நியாயமான கேள்வியையும் ஒவ்வொரு பாமரனிடமும் தோற்றுவித்திருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும் தனியார் மருத்துவக் கல்வி தொடர்பில் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி, “தரமான மருத்துவக்கல்வி ஏற்புடையது” (அரச துறையோ அல்லது தனியார் துறையோ) என ஏற்றுக்கொண்டு அதற்கு வேண்டிய நியமங்களை உள்ளடக்கிய சட்டமூல உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்குரிய ஆவணத்திற்கு மருத்துவத் தொழிற்சங்கங்கள், மருத்துவபீட ஆசிரியர்கள், இலங்கை மருத்துவசபை உட்பட்ட அனைத்து தரப்பினரும் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்விக்கு எதிரான நிலைப்பாட்டுடன் மருத்துவபீட மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முழுமையாக ஸ்தம்பிதமடைய செய்துள்ளமை மிகவும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் நீதித்துறை சம்பந்தப்பட்டிருப்பதுடன், அதன் செயற்பாடுகள் ஏலவே இருக்கின்ற நியமங்களுக்கு உட்பட்ட விதத்தில் இடம்பெறவில்லை என பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அதனை சந்தேகத்துக்கு இடமன்றி நீதித்துறையின் முன்னால் நிரூபிக்கத் தவறியுள்ளன. இதன் விளைவாக இந்த பிரச்சனை பலத்த சட்டச்சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதுடன் நீதித்துறையும் அரச தரப்பும் மோதிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டிய அவசியமும் உள்ளது. தவிரவும், இந்தப் பிரச்சனையை மையப்படுத்தி சில மருத்துவத் தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியான நகர்வுகளை செய்து வருவதாலும் அதனை அரசு உயர்பீடம் ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி நடவடிக்கையாக ஆதாரபூர்வமாக நம்புவதாலும் அது எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை தேசிய மயப்படுத்தல் (அரசுடைமையாக்கல்) சம்பந்தமாக அனைத்து தரப்பினரிடமும் ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், அந்தக் கோரிக்கையை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியருப்பது முரணான தோற்றப்பாட்டையும், சில மருத்துவத் தொழிற்சங்கங்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அரச மருத்துவபீட மாணவர்கள் பலிக்கடாவாக செயற்படுகின்ற தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடமும், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை தேசிய மயப்படுத்துவதற்கு நியாயமான சில காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்ற நிலையில் இந்த பீடத்தின் மருத்துவ மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை புறக்கணிப்பது சிறந்ததல்ல என்றும் கூறினார்.
மேலும் இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அரசியல் சாராமல் பல மருத்துவ அமைப்புகள், சாதாரண பொதுமக்களும் நோயாளிகளும் பாதிக்காத வகையில், தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த அடிப்படையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கான இலங்கை மருத்துவ சபையின் தகுதிகாண் பரீட்சை, ஜோன் கொத்தலாவல பாதுகாப்புமைய பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான விரிவுரைகள் போன்றவற்றை விசேட வைத்திய நிபுணர்கள் இடைநிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணம் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட முடியுமென தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
எனவே, மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தீர்வு எட்டப்படும் வரை தமது கல்வி நடவடிக்கைகளை புறக்கணிப்பதன் மூலம் தமது எதிர்காலத்தை பாழடிக்காது, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களை அவர்களது கல்வி நடவடிக்கைகளை தொடர வருமாறு மிகவும் வினயமாக வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.