வெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.

பட்டதாரிகள் வேலையில்லாமல் சத்தியாக்கிரகங்களை நடத்தக் கொண்டிருக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் வெளிவாரிக் கற்கைகளுக்காக தாம் தெரிவு செய்யப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு பெருந்தொகை மாணவர்கள் பணத்தினைக் கொட்டி வருகின்றனர்.

அதற்கு மட்டக்களப்பில் இருக்கின்ற பிரபல வெளிவாரிக் கற்கைகள் (தனியார்) நிலையங்கள் மாணவர்களைச் சேர்த்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பிலுள்ள ஒரு இந்த வெளிவாரித் தனியார் கற்கை நிலையம் ஒன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வெளிவாரி மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட பரீட்சைக்கு 1500 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்த போதும் 2500 ரூபா பணம் வசூலித்திருக்கிறது. அது தவிர விண்ணப்பங்களை தபாலில் அனுப்புவதற்காக என்று 100 ரூபா அறவிட்டிருக்கிறார்கள். அது தவிர பரீட்சைகள் நடைபெற்ற ஒலுவில், சம்மாந்துறை ஆகிய இடங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக போக்குவரத்துச் செலவுக்கென 300 ரூபாவை அறவிட்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் கருத்தரங்கு என்ற பெயரில் 350 ரூபா பெறப்பட்டிருக்கிறது. அதில் 7 மணிநேரம் என்று அறிவிக்கப்பட்டு 4-5 மணிநேரங்கள் வகுப்பெடுக்கப்பட்டிருக்கிறது. போதாதற்கு வகுப்புக்கள் என்று ஒரு மணிநேரத்திற்கு 50 ரூபா அறவிடப்பட்டு வருகிறது. இதில் என்ன விசேசம் என்றால் இதில் கற்பிப்பவர்கள் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் அனுமதிக்கப்பட்டவர்களா என்பதுடன், இந்த வெளிவாரிக் கற்கைகளை நடத்தும் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டனவா என்ற கேள்வியும் பலரால் கேட்கப்பட்டு வருகிறது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கற்கைக்காக எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெரியாமல் ஒரு பெரும் போட்டிப்பரீட்சைக்கு மட்டக்களப்பிலிருக்கும் வறியவர்கள் முதல் பணக்காரர்கள் வரையானோரின் பிள்ளைகள் இந்த தனியார் நிலையத்தில் கற்று வருகிறார்கள்.
என்ன கவலையான விடயம் என்றால் பல்கலைக்கழகத்தில் பரீட்சை நடத்தப்பட்டு தெரிவு தொடர்பான அறிவித்தல் வருவதற்கு முன்னரே முதலாவது செமஸ்ரர் பீட்சைக்கு பிள்ளைகள் தயாராகிவிட்டார்கள் என்பதுதான்.
இவ்வாறான ஏமாற்று வேலைகளைச் செய்கின்றவர்களினாலும் மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். கற்பிக்கும் போது சொல்லிக்கொடுக்கப்படுகின்றவைகளாலும் அவர்கள் பட்டம் முடித்தபின்னர் வீதிக்குத்தான் இறங்க வேண்டும் என்று எண்ணிவிடுகிறார்கள் என்றும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

வெளிவாரிக் கற்கைகளைப் பொறுத்தவரையில் உள்வாரிக் கற்கைகளுக்குச் சமமாக மாணவர்கள் அனுமதிக்கப்படும் ஒழுங்கு ஒன்று இருந்து வந்தது பின்னர் அதற்கு இரண்டு மடங்கு பிள்ளைகளை அனுமதிக்கும் நிலை காணப்பட்டது. இருந்தாலும் தற்போது எந்த நடைமுறை என்பது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சரியாக அறிவிக்கப்படாத போதும் இவ்வாறு பரீட்சைகள் நடத்தப்பட்டு தனியார் நிலையங்கள் விண்ணப்பங்களுக்கு பணம் அறவிட்டு செமினார்களுக்கும் வகுப்புகளுக்கும் பணம் அறவிட்டு அவசரப்பட்டு கற்பித்து தயார்படுத்துவது எதற்காக என்று பாதிக்கப்படும் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.