ஏமாற்ற முனைந்தால் பல சலுகைகளை இழக்க நேரிடும்

‘சர்வதேசத்தின் பார்வையில் குறிப்பிட்ட காலக்கேட்டுக்குள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாக ஒப்புக்கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடர்ந்து ஏமாற்ற முனைந்தால் பல சலுகைகளை இழக்க நேரிடும் என்ற காரணத்துக்காக எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் என்று நம்புகின்றோம்’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்..

‘ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழக்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கில் நடப்பதற்கு வழியமைக்கும் என்ற சந்தேகமும் எமக்கு உள்ளது’ எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (22) மாலை நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, ‘இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகை, கடந்தகால ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட அடாவடித்தனமான செயற்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது..

தற்போதைய அரசாங்கம் தனது தந்திரோபாய முயற்சி மூலம் அந்த வரிச் சலுகையை மீண்டும் பெற்றுள்ளது. இந்நிலையில், எமது  இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் இந்த அரசாங்கம் எந்தளவுக்கு கவனம் செலுத்தப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரிச்சலுகை வழங்குவதாக இருந்தால், இந்த நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனாலும், உடனடியாக வரிச்சலுகை வழங்கப்பட்டமை நாட்டுக்கு நன்மையாக இருந்தாலும், சிறுபான்மையின மக்களின் பிரச்சினை தொடர்பான விடயத்திலிருந்து அரசாங்கம் சற்று விலகிச் செல்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என எண்ணத் தோன்றுகின்றது’ என்றார்.