மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் உத்வேகத்துடன் களமிறங்கி நடப்பாண்டுக்கான வெற்றியை சுவீகரித்தது.

க.விஜயரெத்தினம்)
பாடுமீன் சமரை உத்வேகத்துடன் களமிறங்கி துடுப்பாட்டத்தினை நேரான சிந்தனையைச் செலுத்தி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் வெற்றிவாகை சூடிக்கொண்டது…
மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி,புனித மிக்கல் கல்லூரிகளுக்கிடையிலான பாடுமீன் சமரானது 2017 ஆம் ஆண்டில் எட்டாவது தடவையாக சனி,ஞாயிறு(20,21,- 5.2017)  தினங்களில் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் நடைபெற்றது.இவ்வாண்டு பாடுமீன் சமரானது  இனிங்ஸ் மெட்ஸ்சாக நடைபெற்றது. புனித மிக்கல்கல்லூரியின் முதல்வர் ஆர்.வெஸ்லியோவாஸ் தலைமையில்  இனிங்ஸ் முறையில் சர்வதேச தரப்படுத்தல் முறையில் நடைபெற்றது.
சனிக்கிழமை காலையில் அதிதிகள் நிகழ்வுக்கு வரவேற்கப்பட்டார்கள்.இதன்போது துடுப்பெடுத்து ஆடுவதற்கு முதலில் நாணயச்சுழற்ச்சி இடம்பெற்றது.நாணயச்சுழற்ச்சியில் வெற்றிபெற்ற புனித மிக்கல் கல்லூரி கிரிக்கெட் அணியினர் துடுப்பெடுத்து ஆடுவதற்கு ஆடுகளத்திற்கு நடுவர்களால் பணிக்கப்பட்டார்கள்.புனித மிக்கல் கல்லூரி அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை முதலாவது இனிங்ஸில்  குவித்தார்கள்.பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியினர் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்று முதல்நாள் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார்கள். நிறுத்திக்கொண்ட மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் இரண்டாவது நாள் மீண்டும்  தொடராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை  காலையில் ஆரம்பித்தார்கள். தமது பாடசாலை அணியினர் வெற்றிபெற வேண்டும் எனும் நோக்கில் உத்வேகத்துடன் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர்  செயற்பட்டார்கள்.கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஏ.கோகுலராஜ்,உதவி பயிற்றுவிப்பாளர் என்.மயூரன் ஆகியோர்களின் உள ஆற்றுப்படுத்தலுடன் முழுமையான ஆலோசனைகளுடனும்,வழிகாட்டல்களுடன் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினரை வளப்படுத்தினார்கள்.
இதன்போது மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் ஒன்பது விக்கெட்டுக்களையிழந்து 248 ஓட்டங்களை குவித்தார்கள்.புனித மிக்கல் கல்லூரி அணியினர் முதலாவது இனிங்ஸில் பெற்றுக்கொண்ட ஓட்டங்களைவிட சுமார்135 ஓட்டங்களை மேலதிகமாக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் பெற்றுக்கொண்டது கிரிக்கெட் வீரர்களுக்கு ரசனை மிக்கதாக அமைந்தது.
 இதன்போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்ட மெதடிஸ்த மத்தி கல்லூரி அணியினர் புனித மிக்கல் கல்லூரி அணியினரை மீளவும் துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தது.இதன்போது புனித மிக்கல் கல்லூரி அணியினர் இரண்டாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்று மேலதிகமாக இரண்டு ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றுக்கொண்டார்கள்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணியினர் இரண்டாவது இனிங்ஸ்ஸில் முதலாவது ஓவரில் முதலாவது பந்தின் நான்கு ஓட்டங்களை பெற்று ஒன்பது விக்கெட்டுக்களால் தொடரை வெற்றிகொண்டது.இந்த சமரில் ரீ.தேவடிலக்ஷன் அதிகூடிய 101 ஓட்டங்களை தனது அணிக்கு குவித்தார்.
இறுதி நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மட்டக்களப்பு தேசிய அபிவிருத்தி முகாமையாளர் எம்.ஆர்.ஹேமேந்திரா,உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவசங்க தலைவர் போல் சற்குணநாயகம்,அதிபர்களான  ஜே.ஆர்.பீ.விமல்ராஜ், பயஸ் ஆனந்தராஜா,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவசங்கத்தலைவர் எஸ்.சசிகரன் மற்றும் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், பழையமாணவர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.சிறந்த பந்து வீச்சாளராக எஸ்.டிருக்ஸனும்,சிறந்த துடுப்பாட்ட வீரராக எம்.பிருந்தாவனும்,சிறந்த வலுப்பெற்ற வீரர்களாக சீ.தேவடிலுக்ன்,எம்.பிருந்தாவனும்,தொடர் ஆட்டநாயகனாக சீ.தேவடிலுக்ஷனும் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளால் பணப்பரிசுகளும், வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டது.