வரட்சியினால் குளங்களின் நீர்மட்டம் குறைவு, விவசாய நிலங்களும் பாதிப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக குளங்களில் நீர்வற்றும், நெல்வயல்கள் கருகியும், குடிநீருக்கு மக்கள் போராடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கோடை மழை பெய்யாததினாலையே இந்நிலையேற்பட்டுள்ளது. அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாதலின் அளவும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

நீர்பாசன பட்டிருப்பு பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தின் நீர்மட்டம் 15அடி உயரத்திலும், கங்காணியார் குளத்தின் நீர்மட்டம் 11அடி உயரத்திலும், அடைச்சகல் குளத்தின் நீர்மட்டம் 10அடி உயரத்திலும், கடுக்காமுனை குளத்தின் நீர்மட்டம் 3அடி உயரத்திலும் இருப்பதாக பட்டிருப்பு பிரிவு நீர்பாசன தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மே மாதம் 13ம் திகதி புளுகுணாவை குளத்தின் நீர்மட்டம் 22அடி உயரத்தில் காணப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து மழைபெய்ததாகவும் இதனால் விவசாயிகளுக்கு நீர் வழங்குவதில் பிரச்சினைகள் எழுவில்லை. இந்த வருடம் குறித்த திகதி கடந்து ஒருவாரமாகின்ற நிலையிலும் இன்னும் மழை பெய்யவில்லை.

அதிக வெப்பமாகவும் காணப்படுவதினால், குளத்தின் நீர் 0.5அங்குலம் தொடக்கம் 1அங்குலம் அளவில் வெப்பமடைகின்றது. குளத்திலிருந்து வாய்க்கால் ஊடாக நீர் வயல்களுக்கு திறந்துவிடுகின்ற போது நீரின் இழப்பு அதிகரிக்கின்றது. தொடர்ச்சியாக மழை பெய்வதற்கு நாட்கள் நீண்டு கொண்டு செல்லுமாயின் விவசாயிகள் இன்னும் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

கடந்த காலங்களில் நவகிரி குளத்தின் நீர் மண்முனை தென்மேற்கு பிரதேச பகுதிக்கு பாய்கின்ற நிலையில், இந்த வருடம் நவகிரி குளத்தின் நீர் இப்பகுதிக்கு பாய்யாததினாலும் விவசாயிகள் பெரிதும் நீரில்லா பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.