மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதாந்தம் நானூறு மில்லியனுக்கு மேலதிகமாக மதுபாவனைக்கு செலவு

க.விஜயரெத்தினம் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதாந்தம் நானூறு மில்லியன் ரூபாய்களுக்கு(400 மில்லியன்)மேலதிகமாக மதுபானம், உட்பட குடிபானங்களுக்கு செலவு செய்யப்படுகின்றது.இந்த மதிப்பீடு வந்து போதைப்பொருள் அதேபோன்று புகைத்தல் தவிர்ந்த கணக்கெடுப்பாக இருக்கின்றது எனத் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்..

 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணத்தின் பிரகாரம்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டல்களுடன்,கிராமிய பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன்,மாவட்ட செயலகமும்,சமூர்த்தி திணைக்களமும் இணைந்து “போதையற்ற மட்டக்களப்பு மாவட்டமாக உருவாக்குவோம்” எனும் விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வு சனிக்கிழமை (20.5.2017) காலை. 8.00 மணியளவில் அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரியின்  மண்டபத்தில்  நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமைதாங்கி உரையாற்றுகையில் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர்தொடர்ந்து பேசுகையில் :-  நான் பலமுறை சொல்லியிருக்கின்றேன்.மட்டக்களப்பு மாவட்டத்தின் நிருவாகச் செயற்பாட்டுக்காக ,உட்கட்டமைப்புக்காக மாதாந்தம் கிடைக்கின்ற தொகையைவிட பன்மடங்கு தொகை மாவட்டத்திலிருந்து மக்களின் நெற்றிவியர்வை சிந்தும் பணம் மாவட்டத்திற்கு வெளியே செல்கின்றது.இதற்கு என்ன காரணம் என்று ஆராயும் மக்களாக இல்லாமல் மதுபோதையில் உள்ள மாவட்டமாக இருக்கின்றது எனும் விடயத்தை மட்டும் நாங்கள் சிந்திப்பதால் மட்டும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது.இந்த மாவட்டத்திலே தொழில்வாய்ப்பு இல்லை.இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் எந்தவித தொழிலும் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.அதேபோன்று பாடசாலையை விட்டு இடைவிலகுகின்ற மாணவர்தொகை அதிகமாக இருக்கின்றது. கடந்தமாதம் ஓட்டமாவடி பிரதேசத்துக்கு வருகைதந்த கல்வி இராஜாங்க அமைச்சர் சொன்னார் இலங்கையிலே கிழக்கு மாகாணம் கல்வியிலே கடசியாக இருக்கின்றது குறிப்பிட்டிருந்தார்.புள்ளிவிபர அறிக்கையிலே இலங்கையில் ஆகக்குறைந்த கல்வியறிவு உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் எனக் கணிப்பீடப்பட்டுள்ளது.அதாவது 67 வீதம் என்று கல்வியறிவு கணிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல் வறுமை உட்பட பல்வேறு பிரச்சனைக்கு மட்டக்களப்பு மாவட்டம் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
போதை எனும் ஒருவிடயத்தை முக்கியப்படுத்தி இந்த மாவட்டத்தின் மக்களின் பொருளாதாரத்தை சீரழிக்கின்றது எனும் கருத்தானது பொதுமக்கள்,புத்திஜீவிகள்,அரசியல்வாதிகள்,மத்தியில் போதைப்பாவனை கவலைக்குரிய விடயமாகும்.இதனை இன்றைய இளையசமுதாயம் உணர்ந்து செயற்படவேண்டும்.
குறிப்பாக மாணவர்கள்,தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்கள் இந்தவிடயத்தை செய்தியாக உங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்பவர்களாக என்பதற்காகத்தான் உங்களை இன்று அழைத்திருக்கின்றோம்.
அதாவது ஒரு வீட்டில் உள்ள தந்தையோ அதன் சார்ந்த குடும்ப அங்கத்தவரையோ, நல்வழிப்படுத்துகின்ற எதிர்த்து கேள்வி கேட்கின்ற ,அவர்களை நல்வழி செலுத்த வேண்டும் எனும் பங்களிப்பு என்பது பிள்ளைகளுக்குத்தான் கூடுதலாக இருக்கின்றது.
அந்தப்பிள்ளைகளின் வட்டத்தில்தான் குடும்பம்  சுழல்கின்றது.எனவே உங்களைச் சுற்றித்தான் உங்களின் அம்மா,அப்பா,சகோதரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.எனவே இந்த மதுபாவனைப்பிரச்சனையை நீங்க உங்களின் வீடுகளில் எடுத்துச் செல்ல வேண்டும்.இதனை உங்களைச் சார்ந்த குடும்பத்திற்கு,சமூகத்திற்கு,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,போன்றோர்களுக்கு மிகவும்தெளிவுப்படுத்தி போதையின் விளைவுகளை தெளிவூட்ட வேண்டும்.
இந்த நிகழ்வில் நாங்கள் 500 உண்டியல்களை வழங்குகின்றோம்.உங்கள் வீட்டில் இருப்பவர்கள் போதைப்பொருள்,மதுபாவனைக்காக செலவுசெய்ய கொண்டு செல்பவர்களிடம் பார்த்து அவர்களிடம்,நீங்க உண்டியலை நீட்டி நீங்க போதைக்காக கொண்டு போகும் பணத்தை உண்டியல்களுக்குள் போடவும் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்துங்கள் எனத் தெரிவித்தார்.