கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

   (வேதாந்தி)

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கும் வேட்பாளர் தெரிவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும:

இவ்விடயத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு வனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்..

உலக மக்கள் தொகையில் 50 வீதம் பெண்களாக இருக்கின்ற போதும் 3 வீதத்துக்கும் குறைவான பெண்களே சமாதானம் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் 18.5 வீதமான பெண்களே பங்கு பெறுகிறார்கள். இதிலுள்ள குறைபாடுகளை போக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசியல் கட்சிகள் கிராம மட்டங்களிலிருந்து ஆரம்பிக்கப்பவேண்டும்.அதற்கு வாய்ப்பாக நடைபெறுகின்ற தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமையாகும்.

தற்போது பெண்களுக்கு அரசியலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கு 2016ஆம் இலக்க 01 திருத்த சட்டம் ஊடாக அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டதுடன் இதன்மூலம் பெண்களுக்கு அரசியலில் 25வீத ஒதுக்கீட்டு முறையினை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இது உள்ளூராட்சி தேர்தலுக்கு பொருத்தமானதாக காணப்பட்டாலும் ஏனைய தேர்தல்களிலும் பெண்களுக்கு வாய்ப்புக்களை வழங்கவேண்டும் என்பதனையே சுட்டிக்காட்டுகின்றது..

அரசியலுக்காக துணிவோடு, அர்ப்பணிப்போடு, நேர்மையோடு ,திட சங்கர்ப்பத்தோடு பங்காற்றுவேன் என்கிற பெண்கள்தான் அரசியலுக்கு வேண்டும். என்னுடைய தகுதியென்ன, திறமையென்ன, ஆற்றலென்ன என்னுடைய சக்தி என்ன என்று தங்களைத் தாங்களே உணர்ந்து கொண்டு சமூகத்துக்கு முன்னால் தன்னை வளர்த்துக் கொண்டு, நான்தான் இவள் என்று தனக்குத்தானே அடையாளமிடுகின்ற பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும்..

இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியலில் ஆர்வம் உள்ள பலபெண்கள் சமுகப்பணியில் ஈடுபட்டுள்ளதை நாம் அன்றாட செயற்பாடுகளில் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கன் பெண்களே .பெண் தான் இந்த உலகத்தினுடைய ஆணி வேர். பெண்கள்தான் குடும்பத்தை, நிருவகிக்கின்றார்கள். கணவனை பராமரிக்கின்றார்கள். பிள்ளைகளை வளர்த்தெடுக்கின்றார்கள். ஆளும் சக்தி அத்தனையும் வெளியே வரவேண்டுமென்றால்   தீர்மானங்களை எடுக்கும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு தேவையாகின்றது. அந்தவகையில் நாடாளுமன்றம், உள்ளுராட்சி, மாகாண சபைகளில் தீர்மானங்கள் எடுக்கும் வேளைகளில் பெண்களின் பங்களிப்பானது முக்கியமானதாக இருக்கிறது

எமது பெண்கள் போராட்ட களத்தில் சமமாக நின்று போராடியவர்கள் போராட்டத்தில் உலகிலே எந்தப்பெண்களும் சாதிக்காத விடயங்களை நமது பெண்கள் சாதித்து காட்டியுள்ளார்கள் அதனை நாம் எம் கண் முன்னே பார்த்துள்ளோம்.

கிழக்கில் சில அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள  பெண்கள் அரசியலுக்கு சரி வரமாட்டார்கள் என கருத்துதெரிவிக்கலாம். ஏன் போராட சென்று போராட்டத்தில் சாதித்துக்காட்டிய பெண்கள் அரசியலில் சாதிக்கமாட்டார்கள்.

எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி சாகச்சென்ற எமக்கு அரசியலில் சாதித்து காட்டுவது மிகவும் இலகுவான விடயமாவே பெண்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர் சமுக ஆர்வலர் அரசியல் செயற்பாட்டாளருமாகிய மட்டக்களப்பைச் சேர்ந்த நளினி ரட்ணராஜா கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியலில் ஆர்வம் உள்ள நன்கு பயிற்றப்பட்ட பல பெண்கள் தயார் நிலையில் உள்ளார்கள். எதிர்வரும் சகல தேர்தல்களிலும் சரியான பெண்களை தேர்ந்தெடுத்து முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது சகல கட்சிகளினதும் கடமையாகம்.. தமிழ் சிங்கள முஸ்லி்ம் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு மனம் திறந்து பேசும் பட்சத்தில்தான் நமது நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டக்கூடிய சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்தார்.

இவ்விடத்தல் நாம் கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பில்

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரணையுடன்

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டமொன்று நடைபெற்றதையும் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

எது எப்படி இருப்பினும் வாக்கு சேகரிப்பதை நோக்காக இல்லாமல் பெண்களும் சமுகத்தில் சம அந்தஸ்த்து உடையவர்கள் மக்களின் நலன் சார்ந்து முடிவெடுப்பதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றஅடிப்படையில் அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இச்சமுக கடமையை தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் உண்டு.