கொக்கட்டிச்சோலையில் அரிசி ஆலை திறப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் அனுசரணையில் புனரமைக்கப்பட்ட அரிசி ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை(18) மாலை கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது..

உக்டா நிறுவனத்தின் தலைவர் இ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், யு.என்.டி.பி நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோன் சொரின்சன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் ஆகியோர் வைபவ ரீதியாக அரிசி ஆலையை திறந்து வைத்தனர்.

பெண்கள், விசேட தேவையுடையவர்கள் ஆகியோருக்கு தொழில் வழங்கும் பொருட்டும், பிரதேசத்து உற்பத்திகளை ஊக்குவிக்கும் மற்றும் இயற்கை முறை விவசாயத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இவ் அரிசி ஆலை கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட குறித்த அரிசி ஆலையின் இயந்திரங்கள் பழுதடைந்தமையினால் அரிசி ஆலையின் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கட்டடங்களும் புனரமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழாவே வியாழக்கிழமை நடைபெற்றன.

சௌபாக்கியா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த அரிசி ஆலையினை உக்டா நிறுவனத்தினர் செயற்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது குறித்த வளாகத்தினை சுற்றி மரங்களும் நடப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேச உயரதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.