முகமாலையில் துப்பாக்கி சூடு ஆயுதம் தாங்கிய இராணுவ, பொலிஸார் குவிப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப்  பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான  வீதியின் முகமாலை கச்சார்வெளி பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏ-9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார், கச்சார்வெளி கிராமப் பக்கமாக சந்தேகத்துக்கு இடமான சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்றுள்ளனர்.

தாம், டோர்ச் லைட் ஒளி  மூலம் அவதானித்த போது, இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி 56 ரகத் துப்பாக்கியினால் நான்கு தடவை பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிப் தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட, பொலிஸாரின் ரோந்துக் காரையும் ரயில் சமிக்கை கட்டுப்பாட்டு பெட்டிகளையும் தாக்கியுள்ளன.

இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

முகமாலை  தொடக்கம் கச்சார்வெளி வரையான 3 கிலோமீற்றர் நீள தூரமும்  முகமாலை தொடக்கம் கிளாலி வரையான 3 கிலோ மீற்றர் தூர அகலத்தில் படையினர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு தேடுதல் நடாத்திவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.