கிழக்கில் முறையற்ற ஆசிரிய இடமாற்றங்கள் பொதுமக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயம்

கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாரதூரமாக பாதிக்கப்பட்ட கல்வி வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டவைகளில் கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களும் அடங்கும். ஆளணிப்பற்றாக்குறை மற்றும் பௌதீக பற்றாக்குறைகளுடன் இயங்கும் இவ்வலயப் பாடசாலைகளின் அடைவு மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இவற்றின் அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்காக பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அவ்வப்போது இடம்பெறும் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் இவ்வலய மாணவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்..

கடந்த வருடத்தில் பதிலாளின்றி இடம்பெற்ற ஆசிரிய இடமாற்றங்களின் பின் ஆசிரிய சமநிலையை சமப்படுத்த முடியாமல் திண்டாடும் இவ்வேளையில், அதிரடியாக மீண்டும் ஒரு முறையற்ற பதிலாளின்றிய ஆசிரிய இடமாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு¸ திருகோணமலை அதிகஷ்டப் பிரதேசக் கல்வி மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துக் காத்துக் கிடக்கும் ஆசிரியர்களின் இடமாற்றத்தினை கவனத்தில் கொள்ளாது, ஒரு சில அதிகாரிகளின் தேவைக்காக மிகக் குறைந்த சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களுக்கு கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்களில் இருந்து இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வலயங்களின் கல்வி நிலைமை¸ஆசிரிய வளம் என்பவற்றை நன்கு அறிந்திருந்தும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை சற்றும் கவனத்தில் கொள்ளாமல், வருடத்தின் நடுப்பகுதியில் இவ்வாறு பொறுப்பற்றவாறு நடந்துகொள்வது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

இவ்வாறான சில, அதிகாரிகளின் செயற்பாடுகளை மாகாண சபை நிருவாகம், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.

மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் இப்பிரதேச மாணவர்களின் கல்வியில் சிறிதளவேனும் அக்கறையற்று நடந்து கொள்ளும் அதிகாரிகளை திணைக்களத்தை விட்டு உடனடியாக வெளியேற்றுவதே பொருத்தமானதாகும்.

எனவே, இவ்வாறான முறையற்ற இடமாற்றங்களை உடனடியாக இரத்துச் செய்தல் வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இவ்விடமாற்றங்களை இடை நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.