மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முக்கிய பாடங்களுக்கு வெற்றிடம்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவற்றினை நிவர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கும் இன்னும் சில பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடம் கடந்த பல வருடங்களாக நிலவுகின்றன. இதனால் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு ஒழுங்குமுறையான கல்வியை வழங்க முடியாமல் இருக்கின்றது. எனவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் சிலர் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். கல்வியல் கல்லூரியில் இருந்து வெளியேறி ஆசிரியர்களாக குறித்த வலயத்திற்கு நியமிக்கப்பட்டவர்களும் சில நாட்களின் பின் இடமாற்றம் பெற்றுச்செல்கின்றனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை கடந்த பல காலங்களாக நிலவுகின்றது. இதற்கான தீர்க்கமான தீர்மானத்தினை குறித்த கூட்டத்தில் எடுக்க வேண்டுமென முன்வைத்தார். அதற்கமைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களை ஒன்றிணைத்து விரைவில் ஒன்றுகூடலொன்றினை நடாத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.