மட்டு. மேற்குக் கல்வி வலயத்தில்; சுமார் 1,500 மாணவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரியாது’

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தைச் சேர்ந்த சுமார்  1,500 மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

 

அத்துடன், வருடாந்தம் 70 சதவீதமான மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தி அடைவதில்லை எனத் தெரிவித்த அவர்,  குறிப்பாக சாதாரணதரப் பரீட்சைக்குத்  தோற்றும் மாணவர்களும் எழுத, வாசிக்க தெரியாதவர்களாக காணப்படும்  துர்ப்பாக்கிய நிலைமை இவ்வலயத்தில் காணப்படுகின்றது எனவும் கூறினார்.

 

மண்முனை தென்மேற்குப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் இன்று  அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,’இலங்கையில் கல்வி நிலையில் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயம் கடைசி நிலையை எட்டியுள்ளமைக்கு கடந்த காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் இடமாற்றம் ஆகியவை காரணங்களாகும். எனவே, இந்த வலயத்தை முன்னேற்றுவதற்கு சரியான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன்,  இந்த வலயத்தைச் சேர்ந்த அதிபர்களும் ஆசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முன்வர வேண்டும்’ என்றார்.