அழிவை தடுக்க எல்லைப்புறங்களில் தற்காலிக அலுவலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

காட்டு யானைகளினால் ஏற்படும் அழிவினை தடுக்க எல்லைப்புறங்களில் தற்காலிக அலுவலகங்களை அமைக்க வேண்டும். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மண்முனை தென்மேற்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு அபிருத்திக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில்  செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற போதே இதனை குறிப்பிட்டார்..

மேலும் தெரிவிக்கையில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பாக வேளாண்மை வயல்நிலங்களை அண்டிய பகுதியில் உள்ள வீதிகள் ஒவ்வொருவருடமும் அகலம் குறைந்து வருகின்றன. மழைகாலங்களில் நீரினால் உடைக்கப்படுகின்றது. இதனால் விவசாயிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்படுகின்றது. வீதிகளின் ஓரங்களில் கால்வாய்கள் அமைக்கப்படாமையினாலேயே இவ்வாறான பிரச்சினைகள் வருடாந்தம் எழுகின்றன. இவற்றினை தடுப்பதற்கு மண்முனை தென்மேற்கு பிரதேசசபை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

கால்நடைகளும் பிரதான வீதிகளில் நடமாடுகின்றன, இதனால் விபத்துக்களும் சம்பவிக்கின்றன. இதனை பிரதேச சபை கட்டுப்படுத்த வேண்டும்.


தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிக்கபட்டு ஓரிரு மாதங்களில் அறுவடை நடைபெறவிருக்கின்றன. அறுவடைக்கு முன்பு காட்டு யானைகளின் தொல்லை வருடாந்தம் இடம்பெறுவதும் வழமையாகின்றது. இதனால் விவசாயிகளின் நெற்செய்கை அழிக்கப்படுவதும் துரதிஸ்டமே. இந்நிலையில் இப்போகத்தில் யானைகளினால் ஏற்படும் அழிவுகளை குறைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைவேலிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் தமக்கான தற்காலிக அலுவலகத்தினை அமைத்து யானைகளை துரத்தும் வேலைகளை முன்னெடுக்க வேண்டும். என்றார்.