உக்கமுடியாத கழிவுகளை மாத்திரம் மக்களிடமிருந்து பெறுவோம்.

(படுவான் பாலகன்) கண்ணாடி, இறப்பர், தகரம் போன்ற கழிவுகளை மாத்திரம் மக்களிடமிருந்து பெறுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். உக்க கூடிய கழிவுகளை வீட்டில் உள்ள பயிர்களுக்கு, மரங்களுக்கு பசளையாக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை நடாத்தி வருகின்றோம் என மண்முனை தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை தெரிவித்தார்..

மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நேற்று(16) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் இறுதிப் பகுதியிலிருந்து மகிழடித்தீவு வைத்தியசாலையின் கழிவுகள் அகற்றப்படவில்லை. இதனால் வைத்தியசாலையில் கழிவுகள் நிரப்பி காணப்படுகின்றன. நோயாளிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரி.தவனேசன் இதன்போது கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதேசசபை செயலாளர், பிரதேச சபையினால் குப்பை கொட்டப்பட்டு வந்த விடுதிக்கல் கிராமத்தில் குப்பை கொட்ட வேண்டாம் எனக்கூறி அம்மக்கள் ஆர்பாட்டம் மேற்கொண்டதனை தொடர்ந்து, கழிவுகள் அகற்றும் வேலைகளை நாம் முன்னெடுப்பதற்கு முன்பாக, மக்களுக்கு கழிவுகளை தரம் பிரிப்பது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம். உக்ககூடிய கழிவுகளை தமது வீட்டிலே உள்ள பயிர்களுக்கு, மரங்களுக்கு இட்டு பசளையாக பயன்படுத்துமாறும், ஏனைய கண்ணாடி, இறப்பர், தகரம் போன்ற உக்கமுடியாத பொருட்களை பிரதேசசபையினர் பெற்றுக்கொள்வோம் எனவும் கூறிவருகின்றோம். குறித்த விழிப்புணர்வு நிறைவு பெற்றதும். உக்கமுடியாத கழிவுகளை மாத்திரம் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வோம். என்றார்.