மட்டு. படைத்தளத்தில் தனியார் விமானங்கள் தரையிறங்க அனுமதி

இதுவரை காலமும், இராணுவ கட்டுப்பாட்டு விமானங்களின் பயன்பாட்டுக்கென மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம், இம்மாத இறுதியிலிருந்து (மே 31 முதல்) தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக, சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ.நிமலசிறி தெரிவித்தார்.

 

சிவில் விமான அதிகார சபையினால், மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு, இதற்கான அங்கிகாரம் வழங்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார். தற்போது வரை, இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு விமான நிலையம், அமைச்சரவை அங்கிகாரத்தின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இம்மாதம் (மே 2017) 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், சிவில் விமான அதிகார சபையிடம் கையளிக்கப்படுமென, அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த அங்கிகாரத்தின் பிரகாரம், மட்டக்களப்பு விமான நிலையத்தின் பராமரிப்பை, இலங்கை விமானச் சேவை நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. இதன்பிரகாரம், மட்டக்களப்பு விமான நிலையம், ஜெட் மற்றும் 50 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை உள்வாங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை, 1200 மீற்றர் நீளமானது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, மட்டக்களப்பு விமான நிலையத்தைப் புனரமைப்பதற்குரிய நிதியை ஒதுக்கியிருந்த நிலையில், 3.17 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2016 ஜூலை 10ஆம் திகதியன்று திறந்துவைத்தார்.

 

சிவில் விமானப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் விதமாக, இரண்டு விமானச் சேவைகள், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறுமென, அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு, உள்ளூர் விமானப் போக்குவரத்து இன்றியமையாதது என, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்   வலியுறுத்தி வந்ததற்கு அமைவாக, இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படுமென்று, கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.