பதிலீடின்றிய ஆசிரியர் இடமாற்றங்களைத் தவிர்க்குமாறு பணிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பதிலீடின்றி ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென்று மாகாணக் கல்வியமைச்சின் செயலாளருக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ  பணித்துள்ளார் என மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், இன்று தெரிவித்தார்.

 

மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில்; தான்;; திங்கட்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த  மாகாண சபை உறுப்பினர்,  இந்தச் சந்திப்பை அடுத்தே ஆளுநர் இப்பணிப்புரையை விடுத்துள்ளதாகவும் கூறினார்..

 

இந்தச் சந்திப்பின்போது கிழக்கு மாகாணமானது கல்வியில் பின்னடைவில் உள்ளதுடன்,  மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மற்றும் கல்குடாக் கல்வி வலயம்  உட்பட  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளில் பதிலீடின்றி ஆசிரியர்கள்  இடமாற்றங்களைப் பெற்றுச் செல்கின்றனர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாகவும்  மாகாண சபை உறுப்பினர்  கூறினார். இந்நிலையில், முறையற்ற வகையிலான ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதிக்க வேண்டாமென்பதுடன், ஆசிரியர் இடமாற்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் ஆளுநர் பணித்துள்ளார். அத்துடன், கிழக்கு மாகாணக் கல்வி வலயங்களில் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள்,  பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகிய  பதவிகளுக்கு தற்காலிகமாக பதவி உயர்வுகளை வழங்குவதை இடைநிறுத்துமாறும் பணித்துள்ள ஆளுநர், முறையான வகையில் பதவி உயர்வை வழங்குமாறும் பணித்துள்ளார் எனவும் மாகாண சபை உறுப்பினர் கூறினார்.