சித்தாண்டி உப தபால் நிலையத்தில் முதியவர்களின் அவலநிலை: அபிவிருத்திக்குழு அமர்வில் ஆராய்வு

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவதற்காக தள்ளாடும் வயதிலும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் செங்கலடி தபாலகத்தின் கீழ் இயங்கும் சித்தாண்டி உப தபாலகத்தில் வருகின்ற முதியவர்கள் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினையை எதிர் நோக்கி வருகின்றனர்..

முதியவர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து செங்கலடி அபிவிருத்திக் குழு அமர்வில் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழு அமர்வு பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று (15) பிற்பகல் செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்திக் குழு அமர்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் சித்தாண்டி உப தபாலகத்தில் பொதுமக்களுக்கு இடம்பெறும் பல்வேறு பிரச்சினையை அபிவிருத்திக்குழு இணைத் தலைமைகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சித்தாண்டி உப தபாலகத்தில் முதியவர்களை பாராமுகமாக நடாத்துவது, 7 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து முதியோருக்கான கொடுப்பனவைப் பெறுவதற்கு வருகைதரும் முதியவர்களை நடத்தும்விதம்,

ஈரளக்குளம் இருந்து சித்தாண்டி உப தபாலகத்திற்கு சுமார் 14க்கு மேற்பட்ட கிலோமீற்றர் வரை சென்று முதியவர்கள் கொடுப்பனவைப் பெறுவதற்கு வருகின்ற முதியவர்களின் அவல நிலை,

சித்தாண்டி – 4, சித்தாண்டி -1 கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மூலமாக முதியவர்களுக்குரிய இருக்கைகள், வெயிலுக்கு ஏற்றால் போல் நிழல் கூடாரம் போன்ற சமூக செயற்றிட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது,

ஈரளக்குளம் இருந்து சித்தாண்டிக்கு முதியோர் கொடுப்பனவுக்காக வருகின்ற முதியோர்களின் அவல நிலையினை மனிதாபிமான முறையில் கையாண்டு மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

சித்தாண்டி உப தபாலகத்தில் இடம்பெறும் பல்வேறுபட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், இம்முறையில் இருந்து முதியவர்களின் நலன்கருதி ஈரளக்குளம் கிராமசேவகர் உட்பட சித்தாண்டி உப தபாலக உத்தியோகஸ்தர் சகிதம் ஈரளக்குளம் சென்று முதியோர் கொடுப்பனவை உரிய இடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு செங்கலடி அபிவிருத்திக்குழு அமர்வில் ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள் மற்றும் செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழு தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எஸ்.வியாளேந்திரன் முன்னிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்தாண்டி உப தபாலகத்தில் சித்தாண்டி 1 (சுமார் 70 க்குமேல்) , சித்தாண்டி -2 (35 பேர்), சித்தாண்டி-3 (77 பேர்) , சித்தாண்டி -4 (109 பேர்) , ஈரளக்குளம் (45 பேர்), மாவடிவேம்பு 1 தொடக்கம் 2 வரையான 7 கிராமங்களை கொண்ட முதியவர்கள் இந்த தபாலகத்திற்கு கொடுப்பனவு காலத்தில் காலை வேளை சுமார் 6.30 தொடக்கம் மாலை 4 மணி வரைக்கும் இருக்கும் அவலநிலை தொடர்ந்து காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.