கூட்டமைப்பால் வடமாகாண சபையில் வழங்கப்பட்ட “போனஸ் ஆசன முஸ்லிம் உறுப்பினர்” பதவி யாருக்கு உரித்தானது

நியாஸ் முஹம்மது அப்துல் மஜீத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வடமாகாண சபையில் வழங்கப்பட்ட “போனஸ் ஆசன முஸ்லிம் உறுப்பினர்” பதவி யாருக்கு உரித்தானது என்பது குறித்த ஒரு தெளிவு..

அது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முடிவுகாண உதவியாக இருக்கும் என்பதால் இதற்கான விடையை தெரிந்துகொள்வதற்காக, வடமாகாண சபைத் தேர்தல், அதனுடன் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் PMGG – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை குறித்து கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.

2013 இல் முதலாவது வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜூலை 29 ஆம் திகதி வேட்புமனுக்களை அனைத்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்கின்றது. மன்னார் மாவட்டத்திலும் அதே தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

ஜூலை 29 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னர் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அஸ்மின் அய்யூப் அவர்களின் பெயர் இடம்பெறுகின்றது. இதற்கு சுமார் பத்து தினங்களின் பின்னர், அதாவது ஆகஸ்ட் 9 ஆம் திகதி மன்னாரில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், PMGG அமைப்பிற்கும் இடையில் எட்டு அம்சங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப் படுகின்றது. அந்த ஒப்பந்தத்தில், பத்து நாட்களுக்கு முன்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னர் மாவட்ட வேட்பாளராக ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்ட அஸ்மின் அவர்களை PMGG யின் பிரதிநிதியாக அந்த அமைப்பு ஊரிமை கொண்டாடுகின்றது.

அந்த ஒப்பந்தத்தின் 7 ஆம், 8 ஆம் சரத்துக்கள், அஸ்மின் அய்யூப் குறித்து தெளிவாக குறிப்பிடுகின்றன. அவற்றில் “மன்னார் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள பிரதிநிதி கணிசமான வாக்குகளைப் பெற்றும் தெரிவு செய்யப்படாதவிடத்து, நியமன முறை மூலம் அவரது பிரதிநிதித் துவத்தை உறுதி செய்வது குறித்து சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

வடமாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்று, சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் PMGG (NFGG) அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேராமல், அதனை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசிலும், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலும் வேட்பாளர்களை களம் இறக்குகின்றது.

மேற்படி தகவல்களுடன், 2007 முதல் 2010 வரை யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சட்டத்தரணி ரஸீன் முகம்மது இமாம் அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாருடனும் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளாமல், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருந்தது என்கின்ற வரலாற்றுத் தகவலையும் சேர்த்து நோக்கும் பொழுது, வடமாகாண சபை முஸ்லிம் போனஸ் ஆசனம் என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால், வடமாகாண முஸ்லிம் மக்களுக்கான நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அஸ்மின் அய்யூப் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றே அன்றி, PMGG அமைப்பிற்கு வழங்கப்பட்ட ஒன்றல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்.

நளீமியா கலாபீட பட்டதாரியான அஸ்மின் அவர்களுக்கு போனஸ் ஆசனம் கிடைப்பது உறுதி என்பதை தெரிந்துகொண்ட PMGG அமைப்பு, தங்களது உறுப்பினராக அஸ்மின் அய்யூப் அவர்களை காட்டிக்கொள்ள நளீமியா தொடர்புகள் மூலம் உள்ளே வருகின்றார்கள். வேட்புமனு தாக்கல் செயப்படும் நேரத்தில் கூட அஸ்மின் அவர்கள் PMGG யின் சாதாரண உறுப்பினராகக் கூட இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சட்டத்தரணி இமாம் அவர்களுக்கு பாராளுமன்ற தேசியப் பட்டியல் கொடுத்தது போன்று, தமிழ் முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்த அஸ்மின் அவர்களுக்கு போனஸ் ஆசனம் கொடுத்தார்களே தவிர, அதனை PMGG என்ற அமைப்பிற்குக் கொடுக்கவில்லை என்பதையே ஒப்பந்தத்தின் வாசகங்களும், இரண்டு வருடங்களின் பின்னர் வந்த பாராளுமன்றத் தேர்தலும் சுட்டிக் காட்டுகின்றன.

குறித்த ஆசனம் PMGG இற்காக வழங்கப்பட்டு இருந்தால், பாராளுமன்றத் தேர்தலில் PMGG தம்முடன் கூட்டுச் சேராமல் எதிர்த்துப் போட்டியிட்ட பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஸ்மின் அவர்களை இராஜினாமாச் செய்ய சொல்லி இருந்திருப்பார்கள். ஆனால் அப்பொழுது அப்படி ஒரு பேச்சுக் கூட எழுந்திருக்கவில்லை என்றால், அதற்கான காரணம் அஸ்மின் அவர்களின் பதவி PMGG உடன் தொடர்பற்றது என்கின்ற நடைமுறை உண்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நன்கு அறிந்து இருந்ததே ஆகும். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் PMGG உடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கூட, போனஸ் ஆசனம் குறித்து குறிப்பிடும் பொழுது “PMGG யின் பிரதிநிதிக்கு வளங்கப்படுவது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்படும்” என்று குறிப்பிடுவதை தவிர்த்து, இராஜதந்திரத்துடன் “மன்னாரில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு வளங்கப்படுவது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்படும்” என்று வார்த்தைகளை கவனமாகக் கையாண்டுள்ளனர்.

உண்மையில் அஸ்மின் அவர்களுக்கு மாகாணசபைக்கு செல்ல PMGG யினர் தேவைப்பட்டு இருக்கவில்லை, மாறாக “எமக்கும் ஒரு மாகாணசபை உறுப்பினர் இருக்கின்றார்” என்று சொல்லிக்கொள்ள PMGG யினருக்கு அஸ்மின் தேவைப்பட்டார் என்பதே உண்மை ஆகும். PMGG சொல்வதைக் கேட்டு அஸ்மின் அவர்கள் பதவி விலகினாலும், இன்னொருவரை PMGG பிரேரிப்பதற்குக் கூட ஒப்பந்தத்தில் எதுவுமே இல்லை. அத்துடன் பதவி வெற்றிடம் ஒன்று ஏற்பட்டாலும் கூட அது மாகாணசபை தேர்தல் சட்டங்களின் பிரகாரம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத இன்னொரு வேட்பாளரைக் கொண்டு நிரப்பப்படுமே தவிர, வெளியாரைக் கொண்டு அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். ஆக, வடமாகாண முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்ட மாகாணசபை போனஸ் ஆசனத்தை வைத்து அற்ப அரசியல் நலனடையலாம் என்று பிழையாக கனவுகாண்பதை PMGG (NFGG) நிறுத்திக் கொள்வதுடன், வீண் சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டுவதே சாலச்சிறந்தது