மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் உள்ளபாடசாலைகளிலும் நாளாந்தம் டெங்கு சிரமதானம்

-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் உள்ள அறுபத்துநான்கு (64)பாடசாலைகளிலும் நாளாந்தம் டெங்கு சிரமதானம் மேற்கொண்டு அதனை மேற்பார்வை செய்துகொள்ள வேண்டும் என மட்டக்களப்பு  வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் இன்று(15.5.2017) திங்கட்கிழமை  கேட்டுக்கொண்டார்.எமது வலயக்கல்வி அலுவலகத்தின் டெங்கு நோயின் தாக்கத்தின் பாதிப்பை கட்டுப்படுத்த கூடிய முன்னேற்றகரமான  வேலைத்திட்டங்கள் பற்றி அவரிடம்  வினவியபோது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்..

அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.இதன்போது சிலர் மரணித்தும் உள்ளார்கள்.டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லாமையே பிரதான காரணமாகும்.
ஆனால் இன்று டெங்கு பற்றிய  விழிப்புணர்வை நாட்டிலுள்ள மக்களுக்கு  ஜனாதிபதி, பிரதமர்,ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு,சுற்றாடல் அமைச்சு,மற்றும் ,அரச திணைக்களங்களினாலும்,அரச படைகளினாலும்,நாடாளவிய ரீதியில் போதியளவு தெளிவூட்டப்பட்டுள்ளது.டெங்கு நோயின் தாக்கம்,அதன்விளைவுகள் ,டெங்கு உருவாகக்கூடிய இடங்கள், தடுக்கும் பொறிமுறைகள்,சுற்றாடலை அசுத்தமாக வைத்திருப்போருக்கான சட்டதிட்டங்கள்,சுற்றறிக்கைகள் மூலம்  அறிவுறுத்தல்களும்,ஆலோசனைகளும்,வழங்கப்பட்டு மிகவும் தெளிவூட்டப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றி ஒவ்வொரு பாசாலையின் அதிபர்கள்,பிரதியதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடன் பாடசாலையில் மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் சிரமதானம் செய்து பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அஃது போன்றே சிரமதானத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களை திண்ம கழிவகற்றல் முறைக்கேற்ப உக்கக்கூடியதும்,உக்கமுடியாததுமான பொருட்களாக தரம்பிரித்து பிளாஸ்ரிக்,பேப்பர், இரும்பு,கண்ணாடிப்பொருட்கள் என வகைப்படுத்தி பாடசாலையில் சேமித்து மட்டக்களப்பு  மாநகரசபைக்கு வழங்கவேண்டும்.குறிப்பாக பாடசாலையில் பிளாஸ்ரிக் பொருட்களை பாவிப்பதில் கவனமாக ஒவ்வொரு பாடசாலையும் சிந்தித்து செயற்படவேண்டும்.
இயன்றளவு பாடசாலைகளில் பிளாஸ்ரிக்,பொலீத்தின்,ரிசுத்தாள்,லஞ்சீற், பாவனையை குறைத்துக்கொள்ளவேண்டும்.இவற்றுக்கு மாற்றீடாக பாரம்பரிய பண்பாட்டு முறைகளை பயன்படுத்த வேண்டும். இவ்விடயங்களைப்பற்றி அதிபர்களும், ஆசிரியர்களும்,மாணவர்களும் விழிப்படைந்து தங்கள் பாடசாலையை  துப்பரவு செய்து டெங்கு நுளம்பு தாக்கத்தில் இருந்து தவித்து,டெங்கு நோயிலிருந்து விடுபடமுடியும்.
இதனை பாடசாலையில் மட்டும் பின்பற்றாமல் கிடைக்கப்பெற்ற அனுபத்தையும்,பயிற்சியையும் வைத்துக்கொண்டு உங்கள் வீடுகளிலும் நாளாந்தம் வினைத்திறனுடன் சிரமதானத்தை செய்வதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தை டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து மீட்டெடுக்கமுடியும்.ஒவ்வொரு பாடசாலைகளிலும் 500தொடக்கம் 2000 வரையும் மாணவர்கள் படிக்கின்றார்கள்.ஒரு பாடசாலையில் இருக்கும் மாணவர்கள்  முழுமையான முறையில்  விழிப்படைந்தால் தங்கள் பாடசாலையும், வீடுகளும் டெங்கு நோயிலிருந்து உயிர்சேதத்தை கட்டுப்படுத்தி அதன் தொகையை மட்டுப்படுத்த முடியும்.
பாடசாலையின் நடைபெறும் டெங்கு சிரமதானத்தில் அனைவரும் பங்குபெற்றவேண்டும்.இவ்வாறு ஒருமித்து செய்வதன் மூலம் பாடசாலையை டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து தவிக்கமுடியும் எனத்தெரிவித்தார்.