துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும். த.கலையரசன்

-க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாணத்தின் எல்லைகளைப் பாதுகாத்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கிராமமாக காணப்படும் துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்..

துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமையத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர் கொளரவிப்பு நிகழ்வு அந்த அமையத்தின் தலைவர் க.ஜெகதீஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (14.5.2017)  நடைபெற்றது.
குறித்த நிகழ்வு துறைநீலாவணை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றதுடன், இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக துறைநீலாவணை மக்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் எல்லைகளில் இருந்து கொண்டு அந்த இடங்களின் இருப்பைப் பாதுகாப்பவர்களாகவே போர்காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இந்த மக்கள் பல இடங்களில் பரந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தமிழர்களுக்காக சில வேலைகளைச் செய்துகொண்டு தான் இருக்கின்றது. அது எமது மக்களுக்குப் பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு கொண்டு இருக்கின்றது.
ஒரு பிரதேசத்தினைப் பொறுத்தமட்டில் கல்வியில் முன்னேற்றம் ஒற்றுமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு கல்வியில் முன்னேறிய போதும் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. அதனை எதிர் காலத்தில் உருவாக்க வேண்டும்.
இதற்கு உங்கள் மத்தியில் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும். இங்கு இருக்கின்ற படித்தவர்கள் உயர் பதவியில் இருப்பவர்கள் பெரியோர்கள் அனைவரும் இணைந்து எம்மத்தியில் ஒன்றுமையை ஏற்படுத்த வேண்டும். அப்போது எதையும் சாதித்துக்கொள்ள முடியும்.
கிராமத்தின் வளர்ச்சி பெயர் சொல்லும் அளவிற்கு முன்னேறாமல் இருப்பது அரசியல் பிரதிநிதித்துவம் இந்த கிராமத்தில் இல்லாமல் இருப்பதனாலேயாகும். அதனால் கட்டாயமாக அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும்.
துறைநீலாவணை கிராமத்தினைப் பொறுத்தமட்டில் சுமார் 60 வருடத்திற்கு முன்னர் இந்த கிராமத்தின் புளியடி எனும் பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினை துரத்தி துரத்தி அடித்த பெருமை இந்த கிராமத்திற்கு இருக்கின்றது.
எல்லைப் பகுதியில் இருந்து கொண்டே எமது இனத்தினுடைய இருப்பைப் பாதுகாத்து கொண்டு இருந்தவர்கள் என்பதில் யாரும் மறுக்க முடியாது. கல்லோயாக் குடியேற்ற கிராமங்கள் யாவும் தாய் கிராமமாக இருக்கும் துறைநீலாவணை கிராமத்தில் இருந்தே குடியேற்றம் இடம்பெற்றது.
ஆகையால் கல்லோயாக் குடியேற்றக் கிராமங்களில் வாழும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாய் கிராமமாக இருக்கின்ற துறைநீலாவணை கிராமம் உதவ வேண்டும்.
அப்பணியைத்தான் இங்கு உள்ள முன்னேற்ற மையப்படுத்தல் அமையம் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளையும் உள்ளவாங்கி செய்து வருவதனையிட்டுப் பாராட்டுகின்றேன்.
ஒரு இனத்தின் தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் ஒரு இனத்தின் இருப்புப் பாதுக்கப்படும். ஒரு இனத்தினை அழிக்க வேண்டுமானால் கல்வியையும் அந்த இனத்தின் மொழியும் அழிக்கப்பட்டால் அந்த இனம் அழிந்ததற்குச் சமனாகும்.
இன்று வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. எமது வேலையில்லாப் பட்டதாரிகள் மாத கணக்கில் போராட்டங்களை நடத்தியும் இன்னும் தொழில் முற்றாக வழங்கப்படவில்லை.
எதிர்காலத்தில் வேலையில்லாப் பிரச்சினை மேலும் அதிகரிக்கும். அதனால் கலைத்துறையினை தெரிவு செய்வதனை குறைத்து எமது மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
அப்போது இலகுவாக தொழிலைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கடந்த வருடம் வெளியான சாதாரண தரப் பரீட்சையில் துறைநீலாவணை மகாவித்தியாலயம், குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயம், நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம்,
வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், 15ஆம் கிராமம் விவேகானந்தா வித்தியாலயம், 13ஆம் கிராம விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து 6 பாடங்களுக்கு மேல் ஏ தரச்சித்தி பெற்ற 28 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு துறைநீலாவணை கிராமத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதேச மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மத்திய விளையாட்டுக்கழக வீரர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, இதில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், அவுஸ்ரேலிய அமைப்பின் அங்கத்தவர் செ.வாசுதன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.