வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாது .ஷிப்லி பாறுக்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து மாற்றமடைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையில் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கின்ற ஒரு நடைமுறை தற்போது ஏற்படுத்தபட்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்..


கிழக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி மீன் சந்தை கட்டிடம் மற்றும் ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலையம் என்பனவற்றை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு 2017.05.12ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

கிழக்கு மாகானத்தினுடைய ஆட்சியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பேற்று வெறுமெனே இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் பூர்த்தியான நிலையில் பத்து வருடங்களில் செய்யப்படக்கூடிய அபிவிருத்திற்கு நிகரான அபிவிருத்திகளை நாங்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது செய்திருக்கின்றோம். 

குறிப்பாக எமது அபிவிருத்திப் பயணத்தில் கல்குடா பிரதேசம் என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்திகளை தற்போது கண்டு வருகின்றது. மிகவும் குன்றும் குழியுமாக காணப்பட்ட இந்த இடத்தில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் சிறந்த முறையில் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றினை அமைத்து இன்று மக்கள் பாவனைக்காக கையளித்திருக்கின்றோம்.
 
மேலும் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரம் போன்ற அனைத்துவிதமான அபிவிருத்திகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரசினூடாக மிகவும் நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு தொடர்ச்சியாக கிழக்கு மாகாணம் பூராக மேலும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது எமது முஸ்லிம் பிரதேசங்கள் ஒற்றுமையாக செயற்பட்டதன் மூலம் கிடைக்கப் பெற்ற மாகாண சபை உறுப்பினர்களினூடாக இந்த மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வளப்படுத்தப்பட்டு அதனூடாக இந்த மாகாணம் பாரிய அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது.

எனவே மக்கள் எங்களுக்கு வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வது மாத்திரமல்லாமல் இந்த நாட்டில் எமது சமூகத்தினுடைய உரிமை மற்றும் சுயாதீனத்தன்மை என்பனவற்றை பாதுகாப்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாமல் போனஸ் ஆசனத்தினூடாக ஆட்சியினைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களது சமூகத்தின் உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற ஒரு நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.

 

வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களால் வெளியிடப்பட்ட வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தானது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பாரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதோடு இந்த நாட்டில் முஸ்லிம்கள் மென்மேலும் சிறுபான்மைப் படுத்தப்படுவார்கள் என்ற உண்மையினை அறிந்திருந்தும் கூட இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் அவருக்கு கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகளே தனது சமூகத்தின் அபிலாசைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்படுவதோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சுயாதீனமாக தனித்து நின்று இயங்குவதன் மூலமே இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்.

அந்த அடிப்படையிலேயே இந்த மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூடமைப்போடு இணைந்து முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகமாகிய இரண்டு சமூகங்களும் ஏமாற்றப்பட்டு விடாமல் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூரணமாக வென்றெடுப்பதற்குரிய காய்நகர்த்தல்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது என தனது உரையில் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும், ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். எச்.எம். இஸ்மாயில், இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலை முகாமையாளர் எம்.ஐ.எம். அஸீஸ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம். அஹமட்லெப்பை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகைதீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை செயலாளர் எஸ். இந்திரகுமார், கல்குடாத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.