தமிழர் அரசியலை வென்றெடுப்பதில் தற்காலச் சூழ்நிலையைக் கையாளுதல் மட்டக்களப்பில் நடைபெற்ற கருத்தாடற் களம்

(சிவம்)
தமிழர் அரசியலை வென்றெடுப்பதில் தற்காலச் சூழ்நிலையைக் கையாளுதல் எனும் தொனிப்பொருளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செயற்குழு உறுப்பினர்களுடனான கருத்தாடற் களம் நேற்று (14) அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி. தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தின் 10 பிரதேசக் கிளைகள் மற்றும் 3 தொகுதிக் கிளைகளைச் சேர்ந்த தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட 96 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட கருத்தாடல் களம் ஆரம்பமானது.
குழு-1 தற்காலச் சூழ்நிலை – பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், குழு-2 ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, குழு-3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளின் வட மாகாணம் மற்றும் திருகோணமலை, அம்பாரை மாவட்டங்கள் கற்றுத் தரும் பாடங்கள் – கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இ.த.அ. கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம்,
குழு – 4 அதிகாரப் பரவலாக்கலின் பின்னரான பிராந்திய நிர்வாகத்தைக் கையாள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலுமை – பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் பதிவாகிய விடயங்களை மண்முனைப் பற்று பிரதேசக் கிளையின் உறுப்பினர் பொ. நரேந்திரன், குழு – 5 கட்சிக் கட்டமைப்பில் சுயமான மற்றும் கட்டுப்பாடான செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகள் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன், குழு -6 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகளும் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராஜா ஆகியோர் குறித்த உபதலைப்புக்களில் கருத்தாடல் களத்தில் உள்வாங்கப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தினர்.
குறித்த தலைவர்களினால் வெளிப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளின் மதிப்பீட்டுத் தொகுப்புரை மற்றும் இக்குழுக்களினால் தற்காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் பற்றியும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.