காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசின் அக்கறையின்மைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முழு பொறுப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாமல் 100வது நாளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராமுகமாகவே நடந்து கொள்கின்றது. அவர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாமல் ஏதோ சாட்டுப் போக்குகள் கூறியே சம்மந்தப்பட்டவர்கள் காலத்தை கடத்திவிட்டார்கள்என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம்  வீ. ஆனந்தசங்கரி வெளியட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எத்தனையோ புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை தம்வசம் வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் அவ்வாதாரங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அருகில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை செய்தால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக யுத்தத்தை தான்தான் முன்னின்று நடத்தி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தேன் என்று கூறுகின்ற கௌரவ சரத்பொன்சேகா அவர்கள் தற்போது அமைச்சராக பாராளுமன்றத்தில் இருக்கின்றார். அவரிடமே இந்த  ஆதாரங்களை காட்டினால் அவர் இலகுவாக இராணுவ அதிகாரிகள் அனேகரை அடையாளம் காண உதவுவார். அதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவாதகளின் நிலையை அறிந்து அவர்களின் உறவுகளுக்கு ஒரு முடிவை அறிவிக்கலாம். இந்த பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையில் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தட்டிக்கழிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழகல்ல.
இதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு செய்யவேண்டிய நடவடிக்கையாகும். அதைவிடுத்து வெறும் வார்த்தை அறிக்கைகளை வெளியிடுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை.
த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளை தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசுக்கெதிராக வாக்களிப்போம் எனக்கூறியோ மிரட்டி சாதிக்கமுடியும்! ஏக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீ. ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம்

தமிழர் விடுதலைக் கூட்டணி