இறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின் துரோகத்தனமும் – ஜுனைட் நளீமி

‘கழிப்பிட வசதி இல்லாமையால் இரவு நேரங்களிலேயே நாங்கள் அண்மித்த பற்றைக்காடுகளுக்குள் தேவைகளை கழிக்க செல்வோம். இப்போது சிலைக்கு காவல் இருப்பவர்கள் நாங்கள் வெளிக்குச்செல்லும்போதே காவலரண்களிலிருந்து டோச் வெளிச்சத்தை எம்மை நோக்கி பாய்ச்சுவதால் ரொம்ப சங்கடங்களை எதிர்கொள்கின்றோம்’ என நான்கு பிள்ளைகளின் தந்தையான பாலன் கணபதிப்பிள்ளை (68 வயது) தனது ஆதங்கத்தை புத்தர் சிலை வாய்ப்பு தொடர்பாக முன்வைத்தார்..
அண்மையில் இறக்காமம் வரிப்பத்தான் சேனைப்பகுதியில் உள்ள மாயக்கள்ளி மலை எனப்படும் மாணிக்கமடு பகுதியில் அமைந்துள்ள மலைமீது புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. புத்தர் சிலை அமைக்கப்பட்ட மலையைச்சுற்றி தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் 1945ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து காடுவெட்டி வாழ்ந்து வருகின்றனர்.
அம்பாறையில் இருந்து தீகவாபியை நோக்கி பயணிக்கும் சிங்களமக்கள் இம்மலையை அண்மித்த பகுதியில் இருக்கும் பாதை வழியாகவே பயணங்களை மேற்கொள்வது வழக்கமாக அமைந்துள்ளது. ‘இரவில் பைசிக்கலுக்கு காத்துப்போனா கூட நம்மட வீட்ட தட்டி காத்தடிக்க பம்ம கேட்டு வாங்கிட்டு போவாங்க. தவிச்சா நிப்பாட்டி தண்ணி கேப்பாங்க’ எனக்கூறும் லெட்சுமி (64 வயது) போருக்கு முன்னரான இனங்களின் சகவாழ்வு குறித்;து பேசுகிறார்.
வில்லுக்குளம், வயல் நிலங்கள், பற்றைக்காடுகள், என இயற்கையான காற்றோடு அமைதியாக காணப்படும் மாணிக்க மாடு பிரதேசம் அண்மைக்காலமாக செயற்கையான எரிமலையாய் குமுறிக்கொண்டிருப்பது அப்பகுதி மக்களுடன் பேசும்போது அவதானிக்க முடிகின்றது. ‘மலைக்கு கீழ இருக்கிற மூன்று வீடுகளையும் எழுப்ப பாக்கிறாங்க . மாற்றுக்காணி இல்லாட்டி காணிக்கு விலை பேசுவதாக சொல்றாங்க. மூணு வீட்டில ஒரு வீட்டுக்காராக்கள் காசிக்கு வித்துடலாம் என்று  சொல்றாங்க. எல்லாரும் ரகசியமாத்தான் வேல பாக்குறாங்க. அமைதியா வாழ்ந்த எங்கட இடத்தில புதுசா பன்சலை அது இதுண்டு வந்து  குழப்பத்தத்தான் குடுக்கப்பாக்கிறாங்க’ என பெயர் சொல்ல விரும்பாத ஒரு தமிழ் வணிகர் கருத்து தெரிவிக்கின்றார்.
‘எழும்பச்சொன்னா நாங்க என்ன செய்யிற பெரும்பான்மையோட சண்டையா பிடிக்கிற பேசாம எலும்பிட்டு போறான். எங்கட்ட என்ன உறுதி ஒப்பமா இருக்கு.  எங்கட அப்பா 1945ம் ஆண்டு காட்டு வெட்டி வீடு கட்டினவர். 1957 வெள்ளத்தில வீடெல்லாம் அழிஞ்சி பிறகு இந்த வீட்டை 2004ல கட்டின நாங்கள்’ என தனது தகரமும் களிமண்ணும், செங்கல்லும் கலந்து கட்டிய பழைய வீட்டை காட்டுகிறார் கனபதிபிளÊளை.
புவிச்சரிதவியலுக்குற்பட்ட புராதன இடமாக பேரினவாத கடும்போக்காளர்கள் தற்போது குறிப்பிடுகின்றபோதும் இதற்கு முன்னர் எவரும் கண்டு கொள்ளாத ஒரு பிரதேசமாகவே இது காணப்பட்டுள்ளது. இம்மலையைச்சுற்றியுள்ள முஸ்லிம்களுக்கு வயல் காணிகளுக்கான ஒப்பங்கள் வழங்கப்பட்டபோதும் யுத்தம் காரணாமாக பராமரிப்பற்ற நிலையில் காணிகள் காணப்பட்டுள்ளன. ஆனால் யுத்தம் முடிந்த பின்னரும் அவற்றை சீராக்கள் பண்ணுவதற்கான நடவடிக்கைகள் அசமந்த தனமாக கைவிடப்பட்டுள்ளமை இத்தகைய நில ஆக்கிரமிப்புக்கு காரணங்களாக அமைந்துள்ளன.
மறுபுறம் பல வருடங்களாக யுத்த காலங்கள் தொடக்கம் அதற்கு முன்னரும் வாழ்ந்த குறித்த மூன்று தமிழ் குடும்பங்களுக்கும் ஒப்பங்களோ உறுதிகளோ வழங்கப்படாத ஓரக்கன் பார்வை இன்று அவர்கள் காணியை விட்டுச்செல்லவும், பெரும்பான்மைக்கு சந்தர்ப்பம் அளிக்கவும் மனநிலையால் தள்ளப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை மீழக்குடியமர்த்துவதில் சில தமிழ் அதிகார வர்க்கம் காட்டிய பாரபட்சம் இன்று திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு  வாய்ப்பாக அமைந்தது போல அம்பாறையில் இத்தகைய தமிழ் சமூகம் மீதான சில இனவாத பார்வை சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்ற கசப்பான உண்மையை இரண்டு இனங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பௌத்த விகாரை கட்டுவதற்கான முஸ்தீபுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இப்பிரதேசத்தை அண்மித்த தீகவாபி உள்ளிட்ட பௌத்த விகாரைகளினÊ விகாராதிபதிகள் இவ்விகாரை அமைப்புக்கு எதிராக கருத்து கூறிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.
போதிய பௌத்த மதகுருக்கள் இல்லாத நிலையில் விகாரைகளை மூடவேண்டிய நிலையில் நாம் இருக்க புதிய விகாரைகள் தேவையற்றது என்ற கருத்தினையும் விகாராதிபதிகள் கொண்டுள்ளனர்.
எவ்வாறிருந்தபோதும் எவ்வாறு திருகோணமலை சேருவில நகர்களை இணைக்கும் மூதூர் பகுதியில் பச்சையூர் மலையில் பௌத்த சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக முஸ்லிம் நிலங்கள் அபகரிப்பு செய்வதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ, கூரைகளை முஸ்லிம் குடியிருப்புக்கள் இனச்சுத்திகரிப்புக்கு முகம்கொடுக்கவேண்டி வந்ததோ இத்தொடரில் மாணிக்கமடு பிரதேசமும் அம்பாறை தீகவாபியை இணைத்த செயற்கையான நில ஆக்கிரமிப்புக்கும சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்குமான முஸ்திபாகவே அமைந்துள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் முஸ்லிம்களது ஓத்துழைப்பை ஹர்த்தாளின்போது வேண்டிநின்ற தமிழ் அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் மௌனித்திருப்பதும், காணாமல் போனோர் விடயத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து முஸ்லிம்களும் ஹார்த்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று அறிக்கைவிட்டு மூக்குடைந்து முஸ்லிம் அரசியல் வியாபார தலைமைகளும் இவ்விடயத்தில் மௌனித்துப்போனதும் செயற்கையான சிங்கள குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கும் தமிழ் முஸ்லிம் ஆள்புல எல்லைகள் மீளமைக்கப்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடும்.
முஸ்லீம் சிவில் சமூகம்  சகோதர தமிழ் சிவில் சமூகத்துடனும் பேசி தீர்மானங்களை எட்டுவதற்கான வாய்ப்புக்களை சிந்திக்க வேண்டியுள்ளது. சாணக்கியமும், சத்தியமும் சந்தி சிரிக்கும் வரை சமன்பாட்டு முரண்பாட்டுடன் அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கும்.