ஏறாவூர்ப்பற்று மேற்கு பிரதேச செலயகப்பிரிவு உருவாக்கப்படுமா? (வேதாந்தி)

மட்டக்களப்பு மாவட்டம் 2633.1 சதுரகிலோமீற்றர் பரப்பளவினையும் அண்ணளவாக 6இலட்சம் மக்கள் தொகையினையும் கொண்ட காடு மலை ஆறுகள் குளங்கள் கடல் வயல்பிரதேசங்களைக்கொண்ட அழகான பிரதேசமாகும்.  1மாநகரசபை, 2நகரசபைகள்,9பிரதேசசபைகள், 14பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கிய மாவட்டமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசசெயலகப்பிரிவுகள் மக்களின்  சன அடர்த்தி, தேவைகளைப்பெற்றுக்கொள்ள மக்கள் பயனிக்கவேண்டிய தூரம், இனம் என்பவற்றை அடிப்படையாக்கொண்டே பிரிக்கப்பட்டுள்ளதை நோக்கலாம். ஆந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசசெயலகப்பிரிவில் மக்கள் தொகையில் இரண்டாவது நிலையிலும் கூடிய நிலப்பரப்பினையும்(634.16 சதுரகிலோமீற்றர்) கொண்ட செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவு இணர்டாகப்பிரிக்கப்படவேண்டும் என்பது படுவான்கரைப்பிரதேசத்தில் வாழும் மக்களின்  நீண்டகால கனவாகும்.
பதுளைவீதி பெரிய புல்லுமலை ,அம்பாறைவீதியில் அமைந்துள்ள மங்களகம மக்கள் உட்பட படுவான்கரைப்பிரதேசத்தில் வாழும் மக்கள் செங்கலடிக்கு வந்து செல்வதில் பல் வேறு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.
நிருவாகத்தை மக்களின் காலடிக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் நாட்டில் பல புதிய பிரதேசப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் கூடிய நிலப்பரப்பினையும் ,மக்கள் தொகையினையும் அதிகளவான கிராமசேவகப்பிரிவினையும் உள்ளடக்கிய ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலகப்பிரிவு இரண்டாகப்பிரிக்கப்படவேண்டியது மக்கள் தங்கள் தேவைகளை இலகுவாகப்பெற்றுக்கொள்ள உதவுவதுடன் மாவட்ட அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.
குறிப்பிட்ட பிரதேசசெயலகப்பிரிவு 39 கிராமசேவகப்பிரிவுகளையும்,,203கிராமங்களையும் உள்ளடக்கியதுடன், 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களையும் உள்ளடக்கியுள்ளது.
செங்கலடி கறுத்தப்பாலத்துக்கு அப்பால் பரந்துவிரிந்த படுவான்கரைப்பிரதேசம் பிரதேசமாகும்.இப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஈரளக்குளம்,கொடுவாமடு,பன்குடாவெளி,வேப்பவெட்டுவான்,கரடியனாறு, மரப்பாலம்,கித்துள்,றூகம்,கோப்பாவெளி, பெரியபுல்லுமலை,கெமுனுபுர(மங்களகம)ஆகிய 11கிராமசேவகப்பிரிவுகளை உள்ளடக்கி இப்பிரதேச செயலகம் உருவாக்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட கிராம சேவகப்பிரிவுகளில் 115 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அத்துடன்இப்பிரதேசம் 527 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்ட பிரதேசமாகக்காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,8கிராமசேவகப்பிரிவுகளுக்கும்,14 கிராமங்களுக்கும் தனிப்பிரதேசசெயலகம் அமைக்க முடியுமென்றால் அதிகளவான மக்கள் தொகையினையும் பரந்துவிரிந்து காணப்படும் மட்டக்களப்பின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பு செய்யும் படுவான்கரைப்பிரதேச பதுளைவீதியினை மையப்படுத்தி  ஏறாவூர்ப்பற்று மேற்கு என்ற பெயரில் உறுகாமத்தையோ,மரப்பாலத்தையோ அல்லது கரடியனாற்றையோ மையப்படுத்தி ஏன் புதிய பிரதேச செயலகப்பிரிவினை அமைக்கமுடியாது.
நீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் கோரிக்கையாகவும் கனவாகவும் காணப்படும் ஏறாவூர்ப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவினை அமைப்பதற்கு மாவட்டத்தின் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ள தவறுவார்களானால் மங்களகம என்ற யெரில் புதிய பிரதேச செயலகப்பிரிவு பெரியபுல்லுமலையினை மையமாகக்கொண்டு அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான வேலைத்திட்டங்களை மட்டக்களப்பில் உள்ள இரண்டு அரசியல்வாதிகள் மறைமுகமாக மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்ஆரம்பக்கட்டமாக மங்களகமவுக்கு தனியான சுகாதாரப்பிரிவு அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யானைவரும் பின்பே மணியோசை வரும் முன்பே என்பதுக்கு இணங்க தற்போதைக்கு தனிச்சுகாதாரப்பிரிவு நாளை தனிப்பிரதேச செயலகம் மங்களகம என்ற பெயரில் அமைக்கப்படலாம்.
தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் அமைக்கப்படும் பிரதேசசெயலகப்பிரிவு மூவின மக்களுக்கான இன நல்லுறவுக்கானதும், இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் எதிர்கால சுபிட்சத்துக்குமான செயலகமானதாகவே அமைய வேண்டும்.