மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சர் மதிப்புக்குரிய வசந்த சேனநாயக்க அவர்களை இன்று 13.05.17 சனிக்கிழமை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு காலை 10.00 மணியளவில் கல்லடியிலுள்ள அமைச்சின் அலுவலக சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசனத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் கையளிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு..
1. உன்னிச்சைக் குளம் மேலும் 2 அடி உயர்த்தப்படுவதன் மூலம் அதன் கொள்ளளவு அதிகரிக்கப்படுவதுடன் குளத்திலிருந்து பாசன நிலங்களுக்கான முழுமையான கொங்கிறீட் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள நீர் விரயமாதல் இல்லாது ஒழிக்கப்படுவதுடன் மேலதிக நிலங்களுக்கு பாசன வசதியும் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் கிராமங்களுக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
2. மாவிலாற்றை திசை திருப்பி ஆண்டான்குளம், தோணிதாண்டமடு , மாணிக்கங்குளம்,  கட்டுமுறிவு ஆகிய குளங்களின் நீர்வளத்தை அதிகரிப்பதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் பாசன வசதியை அதிகரிக்க முடியும். மாவிலாற்றின் குறித்தளவு நீர் பயன்படாது கடலில் கலப்பதால் இதன் மூலம் அதனைத் தடுத்து சேகரித்து பயன்படுத்த முடியும்.
3. கட்டுமுறிவு மற்றும் வாகனேரி குளங்களிலிருந்து பாசன நிலங்களுக்கான முழுமையான கொங்கிறீட் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும்.
4. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குட்பட்ட மதுரங்கேணி, கிரிமிச்சை, புலுக்குணாவ, அடைச்சகல் மற்றும் மியாங்குளம் போன்ற குளங்களை மேம்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் மேலதிக நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
5. கமநல சேவைத் திணைக்களத்துக்கு உட்பட்ட தூர்ந்து போயுள்ள 300 சிறிய குளங்களை புனர்நிர்மாணம் செய்து நடுத்தர குளங்களாக மாற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல். மாவட்டம் பூராக இவ்வாறான ஏறத்தாள 900 சிறிய குளங்கள் இருந்த போதும் பராமரிப்பின்மையால் தற்போது பெயரளவில் எஞ்சியுள்ள 300 குளங்களையாவது புனர்நிர்மாணம் செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
6. ரூகம் கித்துள் நீர்த்தேக்கத் திட்ட அமுலாக்கலுக்கு மன்றம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்ட போதிலும் உரிய காலத்தில் திட்டம் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்படும் விதத்தில் அதன் தொழினுட்ப மற்றும் இயந்திர உதவிகளுக்காக காத்திரமான உள்ளூர் அல்லது வெளியூர் நிறுவனங்கள் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது (யான் ஓயாத் திட்டம் செயற்படுத்தப்பட்டதைப் போல).
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறத்தாள 190000 ஏக்கர் பயிர்செய்யக்கூடிய நிலங்கள் இருந்த போதும் தற்போது ஏறத்தாள 60000 ஏக்கர் மட்டுமே பயிரிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நீர்ப்பாசனத் துறை அபிவிருத்திகள் மூலம் ஏறத்தாள 100000 ஏக்கர் பயிர்ச்செய்கை செய்ய முடியும் என மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றம் எதிர்பார்க்கின்றது. இதனூடாக மொத்த நாட்டின் நெல்லுற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பங்களிப்பான 4-5 வீதம் இருமடங்காகும் என மன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலின் முடிவில் மக்களுக்காக புத்திஜீவிகளும் கல்விமான்களும் சமூக அக்கறையோடு செயற்படுவதை பாராட்டிய அமைச்சர் இவற்றை மாவட்டத்தின் நீர்ப்பாசன அபிவிருத்தி செயற்பாடுகளில் உள்ளீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அரசின் சார்பில் உறுதியளித்தார்.
நன்றி எழுவான் செய்திகள்