முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தினராகிய நாம்  ஒருகோரிக்கையை முன்வைக்கின்றோம்

அந்த வகையில் கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் கொடூர யுத்தம் நடைபெற்று பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படட இறுதிநாளான மே 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக உலகெங்கும் வாழும்  தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது..

இந்த நாள் பாதிக்கப்பட்ட  மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க இடமளித்து தமிழ்  அரசியல் கட்சிகள்  அனைத்தும் ஒன்றினைந்து முள்ளிவாய்க்காலில்   ஒரே இடத்தில் நடத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களை  முன்னுரிமை படுத்தி ஆதரவாக நிக்க வேண்டுமே தவிர பல கட்சிகளும் முள்ளிவாய்க்காலில் வேறு வேறு இடத்தில் அரசியல் வாதிகளின் நிகழ்வுகளாக நடத்த கூடாது. என  பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை நாளாந்தம் உணர்பவர்கள் என்ற ரீதியில் வெளிப்படுத்துகிறோம் .

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் முள்ளிவாய்க்காலில் வெவ்வேறு இடங்களில் பல கட்சிகளும் நிகழ்வுகளை நடத்தியதன் விளைவாக மக்கள் எந்த இடத்தில் நிகழ்வுக்கு செல்வது என்று கூட தெரியாது அல்லல் பட்டதனையும் அரசியல்  வாதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிகழ்வுகள் நடந்ததனையும் அவதானித்திருக்கின்றோம்.

எனவே இவ்வாறான நிலையில் இம்முறை முள்ளிவாய்க்காலில் பல இடங்களில் பல அரசியல் கட்சிகள் போட்டி அடிப்படையில் நிகழ்வுகள் நடாத்த  உள்ளதாக  அறிகிறோம் . எனவே அனைவரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்விலாவது அனைவரும் ஒன்றிணைந்து ஓரிடத்தில் நிகழ்வை நடாத்த வேண்டுமென மக்கள் சார்பாக கோருகின்றோம்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை களியாட்ட நிகழ்வாக்கும் முகமாக   முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில்  நடத்தப்படுகின்ற உதை பந்தாட்ட போட்டி இந்த  பெயரில் நடைபெறுவது பொருத்தமானதல்ல என  பலரும் கூறியும் அந்த போட்டி நடாத்தப்படவுள்ளதாக அறிகிறோம் . எனவே தமிழினம்  பேரவலத்தை சந்தித்த இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில்  நடத்தப்படுகின்ற  இந்த போட்டியானது இந்த பெயரில் நடத்தக்கூடாது என்பதனையும் நாம் ஏற்பாட்டாளர்களிடம் கோருகிறோம்.

உயிரிழந்த உறவுகளை அஞ்சலிக்க வலிசுமந்தவர்களாக ஓரணியில் ஒன்றிணைவோம்  

என தெரிவிக்கப்பட்டுள்ளது