ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சியில் அச்சமூகத்தின் கல்வி மட்டமே அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது ஷிப்லி பாறுக்

இன்றைய கால கட்டத்தில் ஒரு சமூகத்தின் தலைவிதியினை நிர்ணயிக்கின்ற சக்தியாக அந்த சமூகத்தினுடைய கல்வித்தரம் காணப்படுகின்றது. சமூகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளைவிட கல்வித்தரமே என்றும் நிலையானதொரு பலமாக உள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்..


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியால நூலகத்திற்கான புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு 2017.05.12ஆந்திகதி-வெள்ளிக்கிழமை பாடசாலை  பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ. ஹப்பார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

அத்தகைய சிறந்த கல்வியினூடாகவே ஒரு சமூகம் தன்னிறைவுள்ள கௌரவமிக்க சமூகமாக கட்டியெழுப்பப்பட முடியும்.  ஆனால் துரதிஸ்டவசமாக எமது சமூகத்தின் கல்வித்தரம் மிகவும் வீழ்ச்சியினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. குறிப்பாக எமது சமூகத்தின் ஆண் மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்கறிக்கையின் பிரகாரம் கல்வியில் பெண்கள் 73 சதவீத செல்வாக்கினைச் செலுத்துவதோடு ஆண்கள் வெறுமெனே 27 சத
வீதம் மாத்திரமே பங்களிப்புச் செய்கின்றனர்.

முஸ்லிம்களை பொறுத்த வரையில் எமது பெண்களுக்கென்று தனித்துவமான ஒரு சில வரையறைகள் உள்ளதோடு ஆண்கள் சமூகத்தினை  தலைமை தாங்கி வழி நடாத்த வேண்டிய ஒரு பொறுப்பும் காணப்படுகின்றது.
 
எனவே ஆண்களின் கல்வி வளர்ச்சியில் இத்தகைய பின்னடைவுகள் தொடர்ந்துகொண்டு செல்லுமாக இருந்தால் நாங்கள் எமது சமூகத்திற்கு மத்தியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆகவே பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு நிகராக எமது சமூகத்திலுள்ள ஆண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி வீதமும் அதிகரிக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
 
எனவே மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்காக சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்படுவதனூடாக எமது சமூகத்தினை கல்வியில் முன்னேறிய தன்னிறைவுமிக்க சமூகமொன்றாக கட்டியெழுப்ப அனைவரும் முன்வர  வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும் கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல். ஜூனைட் அவர்களும் எனைய அதிதிகளாக பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்ட இணைப்பாளர் ஏ.எம். ஜாபிர் கரீம், கல்குடாத்தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எம். இஸ்மாயில் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலத்தின் பிரதி அதிபர் எம்.ஐ.எம். உபைத், பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.