பதிலீடு இன்றி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

(படுவான் பாலகன்)) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கல்வி கற்பிக்கும் விஞ்ஞானமானி மற்றும் ஆங்கில துறைசார்ந்த ஐந்து ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்படும் பாடசாலைகளுக்கு, பதிலாசிரியர்கள் நியமிக்கப்படவில்லையெனவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிக்கின்றன.
பண்டாரியாவெளி, அம்பிளாந்துறை, அரசடித்தீவு ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் குறித்த இடமாற்றக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை புதிய பாடசாலையில் கடமையை பொறுப்பேற்குமாறு, குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் ஏனைய சில பாடங்களுக்கு ஆசிரியர் இன்றியே பாடசாலைகள் இயங்கிய வருகின்றன. இதனால் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் மாணவர்கள் சிறந்த பெறுபேறை பெறமுடியாத நிலையில் ஜீ.சீ.ஒ.எல் தரத்தில் தவறி கல்வியினை இடைநடுவில் நிறுத்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த வலயத்திற்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, வலயத்தில் இருக்கும் ஆசிரியர்களை எவ்வித பதிலீடு இன்றியும் இடமாற்றம் செய்வது எவ்வகையில் நியாயமானது. எனவே பதிலீடு இன்றி எந்;த ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டாம். எமது வலயத்திற்கான ஆசிரியர் தேவைகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிறைவேற்ற வேண்டுமென மட்டக்களப்பு மேற்கு சமூகம் கோரிக்கை விடுக்கின்றனர்.