கிழக்கில் தமிழ், சிங்கள மக்கள் உடன்பாட்டுடன் செயற்பட்டால் 66% பெரும்பான்மை நிறைவேறும்

 என்.எம்.அப்துல்லாஹ்

வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் தாங்கள் வெளியிட்ட கருத்து மிகுந்த சர்ச்சைக்குறிய கருத்தாக நோக்கப்பட்டது, இதுவிடயத்தில் உங்களுடைய தெளிவினை நாம் எதிர்பார்க்கின்றோம் என ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலாக பின்வரும் தெளிவுபடுத்தலை அய்யூப் அஸ்மின் அவர்கள் முன்வைத்தார்கள்..

வடக்குக் கிழக்கு இணைப்பு விடயம் நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கின்றது, இலங்கை அரசாங்கமும் சிங்கள மக்களும் இதனை மிகப்பெரிய சர்ச்சையாகவே நோக்குகின்றார்கள், மேலும் குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் இது ஒரு சர்ச்சையான விடயமாகப் பார்க்கப்படுகின்றது. உண்மையில் இதன் பின்னால் இருக்கும் யதார்த்தங்களையும் நியாயப்பாடுகளையும் அறிவுபூர்வமாக நோக்குவதற்கு நாம் தவறிவிடுகின்றோம்.

வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை மாத்திரமே நான் முன்வைக்க விளைகின்றேன், மாற்றமாக இந்தக் கருத்தின் அடிப்படையில் நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படல்வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்விடயத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவேண்டிய தார்மீக உரித்து கிழக்கு மாகாண மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமுமே இருக்கின்றது, என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டுவைக்கின்றேன்.

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்று நாம் கருத்து வெளியிட்டால், அதனைக் கண்டு உணர்ச்சி பொங்கப் பேசுவதும்; தீர்மானங்களை வெளியிடுவதும்; நிலைப்பாடுகளை முன்வைப்பதுமாக ஒரு சிலர் செயற்படுகின்றார்கள். அண்மையில் நான் அக்கறைப்பற்றில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும், இதுவே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. அவ்வாறு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கின்றபோது இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு தனிஅலகு என்ற ஒன்று இருக்கக் கூடாது என்றும் அது முஸ்லிம் மக்களுக்கு ஆபத்தானது என்றும் தெரிவித்திருந்தேன். தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலத்திலிருந்து தனி அலக்குக் கோரிக்கைக்கு நான் எதிராகவே இருந்திருக்கின்றேன்.

நளீமிய்யா வளாகத்தில் வெளியாகின்ற கையெழுத்து சஞ்சிகைகளில் இது தொடர்பான எனது ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்துகின்ற பலவீனப்படுத்துகின்ற ஒரு கோரிக்கையாகவே அதனை நான் காண்கின்றேன்; அதற்கான தர்க்கபூர்வமான நியாயங்கள் இருக்கின்றன; இதனைக் கேள்வியுற்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் எனது கருத்தை தன்னுடைய செல்வாக்கற்ற அரசியலை நிமிர்த்தி நிறுத்துவதற்கான துரும்பாக எண்ணி இதற்கு எதிராக தன்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பயன்படுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் தனக்கும் இடையில் இருக்கும் அரசியல் பகைமையைத் தீர்த்துக்கொள்ளவும் அவர் முயற்சித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இதுவிடயத்தில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தைத் தளமாகக் கொண்டு முற்போக்கான அரசியலை முன்னெடுக்கின்றவர்கள் என்றவகையில் உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு கொஞ்சம் அறிவார்ந்தமாக சிந்திப்பது சிறப்பானது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து செல்கின்றபோது மௌலான மௌதூதி அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள், அப்போது அவர் “இரண்டு தேசங்களினதும் நிரந்தரமான அமைதியை நாம் இன்று தொலைத்துவிட்டோம்” என்று சொன்னார். அதற்கு தீவிர பாகிஸ்தானிய தேச பக்தர்கள் கடுமையான எதிர்ப்பை முன்வைத்தார்கள். இன்றும் மௌலான மௌதூதி அவர்களை தேசத்துரோகி என்றுதான் அவர்கள் நோக்குகின்றார்கள். ஆனால் மௌதூதி அவர்கள் சொன்ன கருத்து மட்டும் இன்றும் நிதர்சனமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

தீவிர இனவாதத்தை எதிர்கொள்வதற்காக…

இலங்கை ஒரு இனவாதத்தை இதயத்தோடு இணைத்துக்கொண்ட மக்கள் வாழ்கின்ற தேசம் என்று நான் சொன்னால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை. அது சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும் கருத்தே. இங்கு வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் எல்லோருமே காலத்துக்குக் காலம் பெரும்பான்மை இனப்பற்றாளர்களால் அடிக்கடி பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றோம்; இது வரலாறு. இத்தகைய ஒரு இனமுரண்பாட்டுக் கொதிநிலையை சமப்படுத்துவதற்கு; இந்த நாட்டிலே இருக்கின்ற சிறுபான்மை இனங்கள் தமக்கிடையில் ஒற்றுமையாக ஒரு பிராந்தியத்தின் பலத்தை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகின்றது. இந்தக் கருத்து என்னுடைய கருத்து மாத்திரமல்ல, இதற்கு முன்னரும் இனமுரண்பாட்டினை தனித்தல் குறித்து சிந்தித்த தலைவர்களின் கருத்தாகவும் இருக்கின்றது.

இதற்கான வாய்ப்புள்ள ஒரு மாதிரியாகவே வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைந்திருத்தல் என்ற விடயம் இருக்கின்றது. தமிழ் மொழி பேசுகின்ற மாகாணமாக இரண்டும் இணைந்து ஒற்றுமையாக இருப்பது ஒரு பலமாக அமையும். பிரிவடையாத ஒரு நாட்டினுள் ஒரே மொழியைப் பேசுகின்ற இரண்டு பிராந்தியங்கள் இணைந்திருப்பது சட்டவிரோதமானதல்ல; தேசவிரோதமானதுமல்ல; அது இந்த நாட்டிலே இருக்கின்ற ஏனைய மாகாணங்களுக்கான முன்னுதாரணமாக இருக்கும், அது இந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மொழிபேசுகின்ற மக்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக அமையும்.

நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக….

வடக்குக் கிழக்கு இணைப்போ அல்லது பிரிவோ சட்டரீதியானதல்ல; அது இயற்கையானது. காலனித்துவ ஆதிக்கம் எமது தேசத்தில் ஏற்படுவதற்கு முன்னர் எமது தேசம் 3 பிரிவுகளாக ஆட்சி செய்யப்பட்டமை எல்லோரும் அறிந்திருக்கும் வரலாறாகும். யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், அந்த இராச்சியங்களின் எல்லைகளை அவதானித்தால் வடக்கும் கிழக்கும் காலணித்துவத்திற்கு முந்தைய காலங்களின் இணைந்தே இருந்தன, அம்பாறை மாவட்டம் அல்லது கிழக்கு மாகாணத்தின் தென்பகுதி ஒரு சிலகாலம் கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்திருக்கின்றது, இது வரலாறாகும்.

1829 களில் கோல்புரூக்- கமரூன் அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கை 5 மாகாணங்களாகப் பிரித்து நிர்வாக ஒழுங்குகளை முன்வைத்தார்கள், வடக்கு, கிழக்கு, மத்திய, தென், மேல் ஆகிய 5 மாகாணங்களே அவையாகும். 1845ல் வடமேல் மாகாணமும், 1873ல் வட மத்திய மாகாணமும் 1886ல் ஊவா மாகாணமும், 1889ல் சபரகமுவ மாகாணமும் நிறுவப்பட்டன. இவை அனைத்தையும் காலணித்துவ ஆட்சியாளர்கள் தங்களுடைய நிர்வாக மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காகவே ஒழுங்கமைத்தார்கள்.

அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, வரலாறு, அபிலாஷைகள், மக்களுடைய உறவுமுறைகள் போன்றவிடயங்களை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. வடக்குக் கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையானது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே முன்வைக்கப்பட்டுவரும் ஒரு கோரிக்கையாகும். பிரித்தானியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான ஆணைக் குழுக்களின் முன்னிலையில் தமிழ் மக்களின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்கள். 1948 வரை இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1948களுக்குப் பின்னரே இதன் உண்மையான தாக்கங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருந்தது. பல்லினசமூகங்கள் வாழ்கின்ற தேசமொன்றில் ஒரு இனம் எண்ணிக்கையிலும் அதிகாரத்திலும் பலம் மிக்கதாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது இயல்பான தொன்றாகிவிட்டது. அந்தவகையில் 1948ம் ஆண்டு வடக்குக் கிழக்கில் சிங்கள மக்களின் சனத்தொகை 0.5% ஆகக் காணப்பட்டது. பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் 1956களில் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தின் சிங்கள மக்களுடைய சனத்தொகை 9%மாக இருந்தது, 1965களில் 13%மாகும். 1981ம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சிங்கள மக்களின் சனத்தொகையானது 25%மாக அதிகரித்திருந்தது. இது எப்படி நிகழ்ந்தது? அவர்களுக்கு எமது மக்களுக்கு உரிய வளங்களையும் நிலங்களையும் வழங்கியே இக்குடியேற்றங்களும் குடித்தொகை அதிகரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1948-1981வரையான காலப் பகுதியில் நாட்டினுடைய சிங்கள மக்களுடைய சனத்தொகையானது 238%மாக அதிகரித்தது; அதே சிங்கள மக்களின் சனத்தொகை வடக்கு கிழக்கு மாகாணங்களில் 885% அதிகரிப்பைக் காட்டி நிற்கின்றது.

இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும். இந்நிலை தொடருமாக இருந்தால் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் தம்முடைய நிலங்களை இழந்து, காலப்போக்கில் எமது நிலத்திலே சிறைவைக்கப்படுகின்ற நிலை தோன்றமுடியும். எனவே வடக்குக் கிழக்கு இணைப்பைக் கோருவதில் மிகப்பிரதானமான காரணியாக “நிலத்தைப் பாதுகாத்தல்” என்ற விடயம் இருக்கின்றது.

முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள்….

முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் வடக்குக் கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுகின்றபோது, 1980களுக்குப் பின்னர் தமிழ் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை; 1989 வடக்குக் கிழக்கும் இணைந்த மாகாணசபைகளாக இருந்த சமயத்தில் அதிகாரிகளினால் காட்டப்பட்ட பாரபட்சங்கள்; இன்றும்கூட தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைக்கின்ற இனவாதக் கருத்துக்கள்; முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை; இப்போது 34%மாக இருக்கின்ற கிழக்கின் முஸ்லிம் சனத்தொகை வடக்கும் கிழக்கும் இணைகின்றபோது 17% மாகக் குறைவடையும் நிலைமை; காணிவிடயத்தில் தமிழ் மக்களால் காட்டப்பட்டுவரும் பாரபட்சமான நிலைமைகள்; போன்ற பல்வேறு காரணங்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு என்றபோர்வையில் ஒருவித தமிழர்களின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்றது, இவை அனைத்தும் நியாயமான சந்தேகங்களேயாகும்.

இந்த சந்தேகங்கள் வடக்குக் கிழக்கு பிரிந்திருப்பதற்கான நிரந்தர நியாயங்களை ஏற்படுத்திவிடாது மாற்றமாக இவை தீர்க்கப்படமுடியுமான விடயங்களேயாகும். இப்போது நாம் இருக்கும் பிரிந்த நிலையில் இனவாத அச்சுறுத்தல்கள் எதுவுமே இல்லை என்றும், எமக்கிருக்கின்ற பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி எமக்கிருக்கும் இறைமையின் அடிப்படையில் நாம் மிகவும் சுதந்திரமான, சுயாதீனமான வாழ்வை வாழ்கின்றோம் என்றாலோ, அல்லது எமது மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத வாழ்வை வாழ்கின்றார்கள் என்றாலோ நாம் இணைவதை சிந்திக்காமல் பிரிந்தே இருப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வரமுடியும். ஆனால் இந்த நாடு முஸ்லிம் மக்களுடைய விடயத்தில் எவ்வளவும் இனவாதத்தோடு நடந்துகொள்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிடமுடியும்; இந்த நாட்டிலே இருக்கின்ற 25 மாவட்டங்களுள் ஒரு மாவட்டத்திற்கேனும் முஸ்லிம் அரசாங்க அதிபரை எம்மால் காணமுடியாது. அரசாங்க அதிபராக இருப்பதற்கு தகுதி உடைய ஒரு முஸ்லிமேனும் இந்த நாட்டில் இல்லையா?

கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் மக்கள் அறுதிப் பெரும்பான்மை சமுகமல்ல, 34% முஸ்லிம்கள் 33% தமிழர்கள் 33% சிங்களவர் என்ற அன்னளவான சனத்தொகையே கிழக்குமாகாணத்தின் சனத்தொகையாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏதேனும் ஒருவிடயத்தில் உடன்பாட்டுடன் செயற்பட முன்வந்தால் அங்கு 66% என்கின்ற பெரும்பான்மையினை அவர்கள் அடைந்து கொள்வார்கள் முஸ்லிம் மக்கள் 34% என்கின்ற சிறுபான்மையினராக மாறவேண்டியிருக்கும் என்பதையும் நாம் கருத்திலெடுத்தல் அவசியமாகும். எனவே முஸ்லிம் மக்கள் தங்களுடைய நியாயமான சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு தமிழ் மக்களுடன் மனம்திறந்த பேச்சுவார்த்தைகளை நடாத்தவேண்டும்.

முஸ்லிம்களுக்கு தேவையான தீர்வு என்ன

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கின்ற நிலையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்கின்றவிடயம் தெளிவாகப் பேசப்படல் அவசியமாகும். காணிசார்ந்த பிரச்சினைகள், வளஒதுக்கீடுகள் சார்ந்த பிரச்சினைகள், வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகள் என ஏராளமான விடயங்கள் இன்றும்கூட முஸ்லிம் மக்களுக்கு சவாலாகவே இருக்கின்றன. எனவே இதுவிடயத்தில் நாம் உரிய கரிசனை அவசியமாகும்.

வடக்கும் கிழக்கும் இணைவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் நியாயமான இழப்புகள் ஏற்படுமாயின் அதனைச் சீர்செய்வதற்கு தகுந்த சட்ட ஏற்பாடுகளை நாம் கோரமுடியும். அதாவது வடக்கும் கிழக்கும் இணைகின்றபோது முஸ்லிம் மக்களின் சனத்தொகை 17%மாகக் குறையும் என்ற நிலை இருந்தால், அதனை இயற்கையாக முஸ்லிம் மக்களின் சனத்தொகை 37% விட உயர்வடையும்வரை இப்போது இருக்கின்ற 37% என்ற நிலையை எல்லா ஒதுக்கீடுகள் சமயத்தில் கருத்திலெடுக்கவேண்டும்; என்ற ஒரு விதியை யாப்பினூடாக உறுதி செய்யவேண்டும். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு சுழற்சி முறைமையொன்றை யாப்பு ரீதியாக உறுதி செய்தல்; அதாவது முதலாவது தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்தால் அடுத்த தேர்தலில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக முடியும், என்ற விதியை உருவாக்குதல்.

அதே போன்று உயரிய பதவிகள் எல்லாவற்றிலும் பிரதிப் பதவிகளை உருவாக்கி அப்பிரதிப் பதவிகள் இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் பரஸ்பரம் பகிரப்படுதல் உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பணிப்பாளர் முஸ்லிமாக இருந்தால் அதன் பிரதிப் பணிப்பாளர் தமிழராக இருக்கும் விதத்தில் விதிகளை உருவாக்குதல். எனவே இவ்வாறான மாற்று ஏற்பாடுகளின் மூலம் இரண்டு மாகாணங்களையும் இணைத்து வைத்திருக்க முடியுமான சூழலை உருவாக்க முடியும். வடக்கும் கிழக்கும் இணைந்திருத்தல் வேண்டும் என்று நான் வலியுறுத்துவது இத்தகைய பின்புலத்தோடேயன்றி வேறு எந்தக் காரணங்களினாலும் அல்ல, அது இப்பிராந்திய மக்களுக்கான நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்க முடியும். இந்தப் பின்னணியிலேயே வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை நான் வலியுறுத்தி வருகின்றேன்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்தேயாகும், நான் சார்ந்திருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதுவிடயத்தில் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கு இருக்கின்ற சுந்தந்திரத்தை அங்கீகரிக்கின்ற நாகரிகம் எம் எல்லோருக்கும் மத்தியிலும் இருக்கும் என்றும் நம்புகின்றேன். அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் போன்ற சிங்கள பேரினவாதிகளுக்குத் துணைபோகின்றவர்களால் இந்த யதார்த்தங்களை உணர்ந்துகொள்ள முடியாது. அவர் தலையிட்ட தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை இன்றுவரை தீர்வின்றித் தொடர்கின்றது.

கருமலையூற்றுப் பள்ளிவாயலாக இருக்கட்டும், மாயக்கல்லி மலையிலே முளைக்கின்ற புத்தர் சிலை விவகாரமாக இருக்கட்டும், பொத்துவில் காணிப்பிரச்சினை தொடங்கி புல்மோட்டை வரையான காணி அபகரிப்புகளாக இருக்கட்டும், இப்போதைய முஸ்லிம் அரசியல்வாதிகளால் அவற்றைத் தீர்ப்பதற்கு முடியாது. முஸ்லிம் சமூகத்தை சிறு நிலப்பரப்பினுள் முடக்கும் சிங்கள இனவாத ஆக்கிரமிப்புகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இத்தகைய முஸ்லிம் அமைச்சர்களிடமும், அரசியல் தலைவர்களிடமும் உரிய எவ்விதமான தீர்வுமுறைமைகளும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டு நிற்கின்றேன்.